'ஆஷஸ்' தொடர்-ஆஸி.யை சமாளிக்குமா இங்கிலாந்து?
கார்டிப்: இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பிரபல ஆஷஸ் தொடர் இன்று துவங்குகிறது. கடந்த முறை ஆஷஸ் தொடரை கோட்டைவிட்ட இங்கிலாந்து இம்முறை வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. கடந்த 2007ல் ஆஸ்திரேலியாவில் நடந்த இத்தெடாரில், இங்கிலாந்து அணி 0-5 என பரிதாபமாக தோல்வியடைந்தது.
தற்போது முதல் டெஸ்ட் இங்கிலாந்தில் உள்ள கார்டிப் நகரில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறது.
கடந்த தொடரில் விளையாடியவர்களில் ஸ்டிராஸ், பீட்டர்சன், பிளின்டாப் ஆகிய நட்சத்திரங்கள் தற்போது இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளன. இவர்களது அனுபவம் தான் இங்கிலாந்தின் மிகப்பெரிய பலம்.
ரவி போபரா, மேத்திவ் பிரயார், சுவான், பிராடு, கிரஹாம் ஆனியன்ஸ் என ஐந்து வீரர்கள் முதல் முறையாக ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கின்றனர்.
நெருக்கடியில் பாண்டிங்...
அதே நேரத்தில் வழக்கமாக ஆஷஸ் தொடரை ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா இந்த முறையும் அதற்கு தயாராக இருக்கிறது. சமீபத்தில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தென் ஆப்ரிக்காவிடம் இழந்த ஆஸ்திரேலியா, பின்னர் தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது.
ஆனால், சமீபத்தில் நடந்த டுவென்டி-20 தொடரில் முதல் சுற்றிலே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. இதனால், அந்நாட்டு ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் இம்முறை ஆஷஸ் தொடரை கைப்பற்றி ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் பாண்டிங் இருக்கிறார்.
பிரட் லீ நீக்கம்...
இந்நிலையில் முதல் டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பிரட் லீ நீக்கப்பட்டுள்ளார். இதனால் ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஸ்டூவர்ட் கிளார்க், ஜான்சன் ஆகியோரை அதிகம் நம்பி களமிறங்குகிறது.


Click it and Unblock the Notifications