டிராட் சதம்: இங். அசத்தல்-ஆஸி.க்கு 546 ரன்கள் இலக்கு
லண்டன்: ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வலுவான நிலையில் இருக்கிறது. இரண்டாவது இன்னிங்சில் 373 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவுக்கு 546 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. அறிமுக வீரர் டிராட் சதம் கடந்த அசத்தினார்.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்துடன் இரு அணிகளும் மோதி வருகின்றன.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332, ஆஸ்திரேலியா 160 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு குக் 9, பெல் 4, கோலிங்வுட் 1 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இங்கிலாந்து 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தவித்தது.
அடுத்து வந்த டிராட், ஸ்டிராசுடன் ஜோடி சேர்ந்தார். சூப்பராக விளையாடிய இந்த ஜோடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியாது. ஸ்டிராஸ் 75 ரன்களுக்கு அவுட்டானார். சூப்பராக பேட் செய்த டிராட் சதம் கடந்தார். அவர் 119 ரன்கள் எடுத்தார். கடைசியில் களமிறங்கிய சுவான் அதிரடியாக 55 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு 546 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. கேடிச் 42, வாட்சன் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்


Click it and Unblock the Notifications