ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் தீபிகா பல்லீகல்

ஆஸ்திரேலிய நாட்டின் கான்பெரா நகரில் 33வது ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெண்களுக்கான காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லீகல், உலக ஸ்குவாஷ் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அமன்டா சோபி உடன் மோதினார்.
போட்டியின் துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய தீபிகா, 11-5, 11-7, 12-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன், சீன ஓபன், கரோல் வேமுல்லர் ஓபன் ஆகியவை உட்படும் கோல்டு சீரிஸ் ஸ்குவாஷ் தொடர்களில், அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை தீபிகா படைத்துள்ளார்.
இது குறித்து தீபிகா கூறியதாவது,
காலிறுதி போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டேன். மேலும் காலிறுதி போட்டியில் துவக்கம் முதலே சிறப்பாக ஆடினேன். இதன் மூலம் முதல் 2 சேட்களில் 6-0 மற்றும் 6-1 என்ற புள்ளிகளில் முன்னேற்றம் பெற்றேன்.
ஆடுகளத்தில் முன்பகுதியில் அமெரிக்க வீராங்கனை சிறப்பாக ஆடினார். இதனால் ஆடிகளத்தின் பின்பகுதிகளுக்கு அதிக சாட்களை அடித்து அவருக்கு நெருக்கடி கொடுத்தேன்.
அடுத்த போட்டியில் சிறப்பாக ஆட முடியும் என்று நம்புகிறேன். அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள வீராங்கனை உடன் மோத உள்ளேன். ஆனால் அவர் அனுபவம் மிகுந்த வீராங்கனை என்பதால், போட்டி வெற்றி பெற கடினமாக போராட வேண்டியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் தகுதி சுற்றில் வெற்றி பெற்றுள்ளேன் என்றார்.
இன்று நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் தீபிகா, உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்து வீராங்கனை லாரா மாசரோ உடன் மோத உள்ளார்.


Click it and Unblock the Notifications