சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையேயான போட்டியின் போது மைதானத்துக்குள் தமிழீழ விடுதலையை வலியுறுத்தும் சட்டையை அணிந்து கொண்டு செல்ல முயன்ற 40 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் "தமிழீழ விடுதலை வேண்டும்" என வாசகம் அடங்கிய சட்டையை அணிந்து கொண்டு உள்ளே செல்ல மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மாணவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்ட காவல் துறை மாணவர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே குவிந்த போது சுற்றி வளைத்து கைது செய்தது. 40 மாணவர்களை செய்ய 200 காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் போட்டி நடைபெற்ற பின்னரே மாணவர்களை காவல்துறை விடுவித்தது..
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரபாகரன் என்ற மாணவர், தமது செல்போனை காவல்துறை ஒட்டுக் கேட்பது உறுதியாகியிருக்கிறது. மாணவர்களை எந்தவித காரணமும் இன்றி கைது செய்தது போலீஸ். நாங்கள் உள்ளே சென்று போராட திட்டமிட இல்லை..முறையான டிக்க்டெட் வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல திட்டமிட்டோம். அந்த டிக்கெட்டுகளைப் பறித்து கொண்டது காவல்துறை. ஆனால் டிக்கெட்டுகளுக்கான பணத்தையும் காவல்துறை தர மறுக்கிறது. சென்னை காவல்துறையும் கிரிக்கெட் வாரியமும் சேர்ந்த இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவே கருதுகிறோம் என்றார்.