பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பெய்ஜிங் நகரில் நடந்தன.
கடந்த 8ம் தேதி கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் உலக நாடுகளின் அணிகளின் அணிவகுப்புடன் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக்.
204 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீர வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
உலகின் பார்வையை தன் வசம் வைத்திருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றன. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, குத்துச் சண்டை, ரித்மிக் ஜின்னாஸ்டிக், கால்பந்து, வாட்டர்போலோ ஆகிய பிரிவுகளில் 12 தங்க பதக்கங்களுக்கான போட்டிகள் நடந்தன.
அதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு (சீன நேரப்படி இரவு 8 மணி) நிறைவு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. 2 மணி நேரம் நடக்கும் கோலாகல நிகழ்ச்சியில் கண்கவர் வாண வேடிக்கைகளும் இடம் பெற்றன.
தொடக்க நிகழ்ச்சியில் 15,000 கலைஞர்கள் அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்தி காட்டி பிரமிக்க வைத்தனர். நிறைவு விழாவில் 7,000 கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
நிறைவு விழாவின்போது மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. கென்ய வீரர் வன்சிரு தங்கப் பதக்கம் வென்றார்.
நிறைவு விழாவின்போது இந்திய கொடியை ஏந்தி சென்றார் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த விஜேந்தர் குமார்.
நிறைவு விழாவின் முக்கிய அம்சமாக, ஒலிம்பிக் கொடி, அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லண்டன் நாட்டிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. பெய்ஜிங் மேயர் ஜின்லாங்கிடம் இருந்து லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் ஒலிம்பிக் கொடியை பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரபல இங்கிலாந்து வீரர் டேவிட் பெக்காம் கலந்து கொள்கிறார்.
பதக்கங்களை வாரிய சீனா ...
ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனாவே முதலிடம் பிடித்துள்ளது.
51 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை சீனா வென்றது.
தங்கப் பதக்கங்களின் அடிப்படையில், பட்டியலில் அமெரிக்காவுக்கு 2வது இடம் கிடைத்தது. அமெரிக்கா 36 தங்கம், 38 வெள்ளி, 36 வெண்கலத்துடன் 110 பதக்கங்களைப் பெற்றது. மொத்தப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது.
23 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலத்துடன் மொத்தம் 72 பதக்கங்களுடன் ரஷ்யா 3வது இடத்தைப் பிடித்தது.
ஒலிம்பிக் துளிகள்...
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் முக்கிய அம்சம் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 8 தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்தது.
- பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு மிகவும் விசேஷமாக அமைந்தது. இதுவரை இல்லாத அளவு ஒரு தங்கம், இரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது இந்தியா.
இந்தியா சார்பில் 56 பேர் பங்கேற்றனர். இதில் அபினவ் பிந்த்ரா தங்கமும், சுஷில்குமார், விஜேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று பெருமை சேர்த்தனர்.
- 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் உலக சாதனையுடன் தங்கம் வென்றார். ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் போல்ட்டுக்கு தங்கம் கிடைத்தது.
- மாரத்தான் போட்டியில், தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றை ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே வென்று சாதனை படைத்தனர்.
- கால்பந்தில் அர்ஜென்டினா தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
- ஜிம்னாஸ்டிக்ஸில் சீனாவின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. மொத்தம் உள்ள 18 தங்கப் பதக்கங்களில் சீனா 11ஐ அள்ளியது.
- நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கொண்ட குழுக்கள் கலந்து கொண்டன.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications