
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று பெண்களுக்கான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் உலக வில்வித்தை வீராங்கனைகளின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தீபிகா குமாரி போட்டியில் கலந்து கொண்டார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளவர்களுக்கான எதிர்பார்ப்பு பட்டியலில் இருந்த தீபிகா குமாரி, இங்கிலாந்தின் அமி ஒலிவர் உடன் மோதினார். ரவுண்ட் 32 என்ற தகுதி சுற்று போட்டியில், முதல் செட்டில் தீபிகா 8, 9, 9 என்று வரிசையாக வட்டங்களில் எய்தார். ஆனால் ஒலிவர் 8, 10 (இன்னர்), 9 என்று சிறப்பாக அம்புகளை எய்து முதல் செட்டை கைப்பற்றினார்.
2வது சுற்றில் தீபிகா குமாரியின் அம்புகளை 9, 8, 9 என்று எய்தார். ஆனால் 2வது சுற்றில் இங்கிலாந்தின் ஒலிவர் 3 அம்புகளையும் 10 புள்ளி வட்டத்திற்கு எய்து வென்றார். போட்டியின் முடிவில் இங்கிலாந்து வீராங்கனை 6-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு முன்னேறினார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற இந்திய வில்வித்தை அணியின் கடைசி பதக்க எதிர்பார்ப்பாக இருந்த தீபிகா குமாரியும், போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வில்வித்தை அணியின் பதக்க கனவு கலைந்தது.