இந்தியாவின் உலக கோப்பை கனவு 'புஸ்'-இங்கிலாந்திடம் தோல்வி
லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்ல வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு கனவாகவே போய்விட்டது. நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர்-8 போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது, அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. சூப்பர்-8 சுற்றின் முதல் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியடைந்த இந்தியா நேற்று தனது இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
டாஸ் வென்ற கேப்டன் டோணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஓஜா, இர்பான் பதான் நீக்கப்பட்டு, ஆர்பி சிங், ரவிந்திர ஜடேஜா களமிறங்கினர்.
இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரராக வந்த ரைட் 1, போபரா 37 ரன்கள் எடு்ததார். மூன்றாவது வீரராக வந்த கேப்டன் பீட்டர்சன், இந்திய பந்துவீச்சை விளாசி தள்ளினார். அவர் 27 பந்தில் 46 ரன்களுக்கு அவுட்டானார்.
மஸ்கரன்ஹாஸ் 25, ஓவைஸ் ஷா 12 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு துவக்கம் நன்றாக அமையவில்லை. ஷேவாக் பதிலாக விளையாடி வரும் ரோகித் சர்மா 9 ரன்களுக்கு அவுட்டானார். கம்பீர் 26 ரன்கள் எடுத்தார். ரெய்னா 2 ரன்களுக்கு திருப்தியடைந்து நடையை கட்டினார்.
ஓரளவு பேட் செய்த ஜடேஜா 25 ரன்கள் எடுத்தார். யுவராஜ் 9 பந்தில் 17 ரன்களுக்கு அவுட்டானார். கடைசிக்கட்டத்தில் வெற்றிக்கு போராடிய தோனி 30, யூசுப் பதான் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்டது. இதன்மூலம் இரண்டாவது முறையாக டுவென்டி-20 கோப்பை வெல்ல வேண்டும் என்ற இந்திய ரசிகர்களின் கனவு நிறைவேறாமல் போய்விட்டது.
அயர்லாந்து வெளியேறியது...
மற்றொரு சூப்பர்-8 போட்டியில் இலங்கை, அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து அயர்லாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.


Click it and Unblock the Notifications