வெலிங்டன்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டொன்டி-20 போட்டி நாளை வெலிங்டனில் நடக்கிறது. இதில் வென்று முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராக இருக்கிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டொன்டி-20 தொடரில் விளையாடி வருகிறது. கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருக்கிறது.
இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை காலை இந்திய நேரப்படி 11.30 மணிக்கு வெலிங்டன் நகரில் நடக்கிறது. தொடரை சமன் செய்ய இப்போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. மேலும் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் ரெய்னாவை தவிர்த்து அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் ரசிகர்களை கைவிட்டுவிட்டனர். ஷேவாக், யூசுப் பதான் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்த போதும் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை பெற்றுத்தரவில்லை. அதிகம் சோபிக்காத யுவராஜ் ரன் குவிக்க வேண்டியது அவசியம்.
மந்தமாக விளையாடும் ரோகித் சர்மா டொன்டி-20க்கு தேவையா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. நியூசிலாந்து அணியை போல் நம்மிடம் ஆல்-ரவுண்டர்கள் இல்லாதகுறை முதல் போட்டியில் தெளிவாக தெரிந்தது.
இதனால் ரோகித்தை நீக்கிவிட்டு புதுமுகமான ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். ஆனால், தேர்வு குழுவினரின் கருணை பார்வை அவருக்கு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.
அதேபோல் பவுலிங் ஆல்-ரவுண்டராக அணியில் இடம்பிடித்த இர்பான் பதான் பவுலிங்கை சுத்தமாக மறந்துவிட்டார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இவருக்கு பதிலாக பிரவீண் குமார் போன்ற துல்லி பவுலருக்கு வாய்ப்பு கொடுத்தால் அதிக பலன் கிடைக்கும்.
ஆனால் கடைசி நேரத்தில் பேட்டிங்கில் அதிகம் கைகொடுப்பதால் இர்பான் தொடர்ந்து களமிறக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
இதுவரை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்திருப்பது வருத்தமானது. இந்த வரலாற்றை நாளை டோணி தலைமையிலான இந்திய அணி மாற்றி எழுதும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
அதேசமயத்தில் நியூசிலாந்து அணி நாளை வென்று சொந்த மண்ணில் தொடரை வெல்ல முயற்சிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நியூசிலாந்து பயிற்சயாளர் ஆன்டி மோல்ஸ் கூறுகையில், திறமை வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரில் முன்னிலை பெற்றுள்ளோம். அதை தக்கவைத்து கொள்வோம். எங்கள் வீரர்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறார்கள் என்றார் ஆன்டி மோல்ஸ்.