கொழும்பு: இந்தியாவுடனான ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தில்ஷன், சங்ககரா போட்டனர்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை நடந்த 4 போட்டிகளில் வென்றுள்ளது. தொடரை வென்று விட்ட இந்திய அணியும், ஒரு போட்டியிலாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இலங்கை அணியும், இன்று கொழும்பு நகரில் நடைபெறும் ஐந்தாவது மற்றும் கடைசி்ப் போட்டியில் விளையாடின.
டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நான்காவது போட்டியில் பங்கேற்காத சச்சின், ஜாகிர் கான் இன்றும் களமிறங்கவில்லை. பிரவீன் குமார், ஓஜா நீக்கப்பட்டு பாலாஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ரவிந்திர ஜடேஜாவுக்கும் இடம் கிடைத்தது.
இலங்கை அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை கடைப்பிடித்தது. ஜெயசூர்யா, தில்ஷன் அதிரடி துவக்கம் தந்தனர். ஜெயசூர்யா 35 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து, இர்பான் பதான் பந்தில் அவுட்டானார்.
அடுத்து வந்த சங்ககரா, இந்திய பந்துவீச்சை ஒருகை பார்த்தார். இவர் 1 சிக்சர், 8 பவுண்டரி உட்பட 70 பந்தில் 84 ரன்கள் எடுத்தார். கந்தம்பி 26 ரன்கள் எடுத்தார்.
சூப்பராக விளையாடிய தில்ஷன் 97 ரன்களுக்கு ரன்-அவுட்டாகி, சதம் கடக்கும் வாய்ப்பை இழந்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய மகரூப் 23 பந்தில் 32 ரன்கள் எடுக்க இலங்கை 300 ரன்களை தாண்டியது.
இலங்கை 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது.
பின்னர் இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஷேவாக் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியனுக்குத் திரும்பினார். அடுத்த அதிர்ச்சியாக கம்பீரும் 13 ரன்களில் வீழ்ந்தார். இந்தியா 52 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.
இவர்களை தொடர்ந்து ரோகித்தும் 15 ரன்களுக்கு பொறுப்பில்லாமல் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் டோணி, யுவராஜூடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்பாக விளையாட இந்திய ரசிகர்களுக்கு லேசாக நம்பிக்கை பிறந்தது.
இந்நிலையில் அதிரடியாக விளையாடிய் யுவராஜ், முரளிதரன் பந்தில் அவுட்டானார். இவர் 1 சிக்சர், 11 பவுண்டரி உட்பட 62 பந்தில் 73 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் (3) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக இருந்த கேப்டன் டோணியும் (53) அரைசதம் கடந்து அவுட்டாக, இலங்கையின் வெற்றி கிட்டதட்ட உறுதியானது.
கடைசியில் களமிறங்கிய ரவிந்திர ஜடேஜா தனது முதல் போட்டியில் அரைசதம் கடந்து, தோல்வி வித்தியாசத்தை வெகுவாக குறைத்தார். அவர் 60 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி 48.4 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
கடைசி போட்டியில் இலங்கை 68 ரன்கள் வித்தியாசத்தில் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்து ஆறுதல் தேடி கொண்டது.