ஆஷஸ் - பிளின்டாப் அபாரத்தால் லார்ட்ஸில் இங்கிலாந்து வெற்றி

தனது உடல் திறன் மற்றும் பந்து வீச்சுத் திறமை குறித்து சரமாரியாக வீசப்பட்ட விமர்சனங்களுக்கும் அவர் முற்றுப் புள்ளி வைத்தார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலா ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் கடுமையாகப் போராடி டிரா செய்தனர்.
2வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த மைதானத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்புதான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை வென்றது. அதன் பின்னர் இதுவரை ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தியதில்லை. இதனால் இந்தப் போட்டியில் எப்படியும் வெல்ல இங்கிலாந்து வீரர்கள் உறுதியாக இருந்தனர்.
அதற்கேற்ப அபாரமாக தங்களது திறமையை வெளிப்படுத்தி ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவை திணறடித்து வந்தனர்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து, 425 ரன்களைக் குவித்தது. ஸ்டிராஸ் சதம் போட்டார்.
பின்னர் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை வெறும் 215 ரன்களுக்கு இழந்தது. ஆண்டர்சன் 4, ஆனியன்ஸ் 3, பிளின்டாப் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 522 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை எட்டிப் பிடிக்க கடுமையாக போராடியது ஆஸ்திரேலியா.
ஆனால் பிளின்டாபும், ஸ்வானும் சேர்ந்து ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையை உடைத்துத் தகர்த்தனர்.
பிளின்டாப் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை சாய்த்தார். ஸ்வான் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் காரணமாக, ஆஸ்திரேலியா 406 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னணி பெற்றுள்ளது.
75 ஆண்டுகளுக்குப் பிறகு...
லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை 75 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஆஷஸ் தொடரில் முதல் முறையாக இந்த மைதானத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
75 ஆண்டுளுக்கு முன்பு பிராட்மேன் தலைமையிலான அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. அப்போட்டியில், இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஹெட்லி வெரிட்டி 15 விக்கெட்களை வீழ்த்தினார். அதிலும் பிராட்மேனை 2 இன்னிங்ஸிலும் இவரே வீழ்த்தினார்.
அதன் பின்னர் இங்கு ஒரு முறை கூட ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தியதில்லை.
இந்த நூற்றாண்டில், லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இங்கிலாந்து ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications