டெல்லி: இந்திய ஹாக்கி சம்மேளனம் நேற்று அதிரடியாக கலைக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்த கே.பி.எஸ்.கில்லும் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறத் தவறியது இந்திய அணி. இது நாடு முழுவதும் உள்ள ஹாக்கி ரசிகர்களை மனம் உடையச் செய்தது.
சம்மேளனத்தின் செயல்பாடுகளே இந்திய அணியின் வீழ்ச்சிக்குக் காரணம் என கடுமையான சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரன், வீரர் ஒருவரை அணியில் சேர்க்க லஞ்சம் வாங்கியதாக வீடியோ செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உடனடியாக ஜோதிகுமரன் ராஜினாமா செய்துவிட்டார். அதேபோல தலைவர் கே.பி.எஸ்.கில்லும் விலக வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கோரினார். ஆனால் அதை நிராகரித்து விட்டார் கே.பி.எஸ். கில்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் கே.பி.எஸ்.கில்லும் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் இந்திய ஹாக்கி சம்மேளனத்தைக் கலைப்பதென தீர்மானிக்கப்பட்டது. கில்லும் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த முடிவுகளை ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி அறிவித்தார்.
இதுதவிர முன்னாள் ஹாக்கி வீரர் அஸ்லம் ஷெர்கான் தலைமையிலான இடைக்காலக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஹாக்கி ஜாம்பவான்களான தன்ராஜ் பிள்ளை, அசோக்குமார், அஜீத் பால் சிங், ஜாபர் இக்பால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
செய்தியாளர்களிடம் சுரேஷ் கல்மாடி பேசுகையில், இது மிகவும் வலி தரக் கூடிய முடிவு. இருப்பினும், ஹாக்கி சம்மேளனம் மீது ஊழல் புகார்கள் எழுந்து விட்ட நிலையில் இனியும் மெளனமாக இருக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவுக்காக விளையாடிய முன்னாள் வீரர்கள், ஹாக்கி ஜாம்பவான்கள், கேப்டன்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது கே.பி.எஸ்.கில்லுக்கு எதிரான நடவடிக்கை அல்ல இது. அவர் மீது மரியாதை வைத்துள்ளோம். கூட்டம் முழுவதும் கே.பி.எஸ். கில் அமர்ந்திருந்தார். இது ஒரு மனதான முடிவு.
இக்கூட்டத்திற்கு ஜோதிகுமரன் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. வந்திருந்தால் அவரிடம் விசாரணை நடத்தியிருப்போம் என்றார் கல்மாடி.