ஹைதராபாத்: முன்னாள் பேட்மின்டன் வீரர் கோபிசந்த்தின் பேட்மின்டன் பயிற்சி அகாடமிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது. ஆசிய பேட்மின்டன் சம்மேளனத்தின் கான்டினென்டல் பயிற்சி மையமாகவும், மலேசிய பேட்மின்டன் சங்கத்தின் தேசிய பயிற்சி மையமாகவும் இது மாறுகிறது.
முன்னாள் ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியனான கோபிசந்த் இப்போது ஹைதராபாத்தில் உலகத் தரம் வாய்ந்த அகாடமியை வைத்துள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை சாய்னா நெஹ்வாலின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், கோபிசந்த்தின் பயிற்சி அகாடமிக்கு மிகப் பெரிய பெருமை கிடைத்துள்ளது. அவரது அகாடமி, ஆசிய பேட்மின்டன் சம்மேளன கான்டினென்டல் பயிற்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல மலேசிய பேட்மின்டன் சங்கத்தின் தேசிய பயிற்சி மையம் என்ற இன்னொரு பெருமையும் கிடைத்துள்ளது.
இன்று முதல் இந்த சிறப்பு அந்தஸ்து கோபிசந்த்தின் அகாடமிக்குக் கிடைக்கிறது.
உலக பேட்மின்டன் சம்மேளனம், ஏற்கனவே சோபியா (பல்கேரியா), குவாங்ஸோ (சீனா), சார்பிரக்கன் (ஜெர்மனி) ஆகிய நகரங்களில் உலக பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த்தின் அகாடமி இணைகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது பேட்மின்டன் அகாடமியைத் தொடங்கினார் கோபிசந்த். இந்தியாவிலேயே மிகப் பெரிய பேட்மின்டன் அகாடமி இது. இங்கு மொத்தம் எட்டு கோர்ட்கள் உள்ளன.
தனி ஒரு மனிதராக இந்த அகாடமியை உருவாக்கியவர் கோபிசந்த். இந்திய அணியின் தேசியப் பயிற்சியாளராக சிறப்பாக செயல்படுவதோடு, சாய்னாவின் தனிப்பட்ட பயிற்சியாராகவும் செயல்பட்டு, சாய்னா உலக அரங்கில் ஜொலிக்க முக்கிய காரணமாகவும் திகழ்கிறார்.