பெய்ஜிங்: இந்திய குத்துச் சண்டை வீரர்கள் அகில் குமார், ஜித்தேந்தர் குமார் ஆகியோரைத் தொடர்ந்து விஜேந்தரும் காலிறுதிக்குத் தகுதி பெற்று இந்திய குழாமை குஷிப்படுத்தியுள்ளார்.
ஹரியாணாவைச் சேர்ந்த இந்த மூன்று குத்துச்சண்டை வீரர்களும், இந்திய குத்துச்சண்டை வரலாற்றில் புதிய வரலாறு படைத்துள்ளனர். முதல் முறையாக ஒலிம்பிக் காலிறுதிப் போட்டிக்கு இந்த மூன்று வீரர்களும் தகுதி பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு நிச்சயம் இவர்கள் மூலம் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்க நம்பிக்கையை அதிகரித்துள்ளது குத்துச்சண்டை. ஆரம்பத்தில் அதிக கவனத்தை ஈர்க்காமல் இருந்த குத்துச்சண்டை இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் விஜேந்தர், அகில் குமார், ஜித்தேந்தர் ஆகியோரின் அபார முன்னேற்றம்.
முதலில் அகில் குமார் (54 கிலோ) காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்து ஜித்தேந்தர் (51 கிலோ) காலிறுதிக்குள் நுழைந்தார். தற்போது விஜேந்தரும் காலிறுதிக்குப் போயுள்ளார்.
நேற்று இரவு நடந்த 75கிலோ எடைப் பிரிவு போட்டியில் தாய்லாந்து வீரர் ஆங்கான் சோம்புஹாங்கை 13-3 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தி காலிறுதிக்குள் காலடி எடுத்து வைத்தார் விஜேந்தர். இப்போட்டியில் விஜேந்தரின் கையே ஆரம்பத்திலிருந்து மேலோங்கி இருந்தது.
காலிறுதியில், ஈகுவடார் வீரர் கார்லோஸ் கோங்காராவை விஜேந்தர் எதிர்கொள்ளவுள்ளார். இதில் அவர் வெற்றி பெற்றால் பதக்கம் கிடைப்பது உறுதியாகி விடும்.
பிரமீளாவுக்கு 28வது இடம்:
ஒலிம்பிக், மகளிர் ஹெப்டதலான் போட்டியில் இந்தியாவின் ஜிஜி பிரமீளா 28வது இடத்தைப் பிடித்தார். மற்ற வீராங்கனைகளான ஷோபா, சுஷ்மிதா சிங்கா ராய் ஆகியோர் முறையே 30 மற்றும் 33வது இடத்தைப் பிடித்தனர்.
பிரமீளா 100 மீட்டர் தடை ஓட்டத்தில் 983 புள்ளிகளும், உயரம் தாண்டுதலில் 903 புள்ளிகளும், குண்டு எறிதலில் 639 புள்ளிகளும், நீளம் தாண்டுதல் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தலா 894 புள்ளிகளும், ஈட்டி எறிதலில் 692 புள்ளிகளும், 800 மீட்டர் ஓட்டத்தில் 777 புள்ளிளும் என மொத்தம் 5771 புள்ளிகள் பெற்றார்.
ஷோபா மொத்தம் 5749 புள்ளிகளும், சுஷ்மிதா 5705 புள்ளிகளும் பெற்றனர்.
உக்ரைன் வீராங்கனை நடாலியா டோப்ரின்ஸ்கா 6733 புள்ளிகளுடன் முதலிடத்ைதப் பிடித்து தங்கம் வென்றார்.