சென்னையில் கிரிக்கெட் அகாடமி தொடங்கும் மாத்யூ ஹெய்டன்

இதற்காக இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளரும், முன்னாள் நியூசிலாந்து கேப்டனுமான ஸ்டீபன் பிளமிங்கின் உதவியை அவர் நாடியுள்ளார்.
ஹெய்டன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அவருக்குப் பிடித்துப் போனதால்தான் இங்கு அகாடமி தொடங்க விருப்பம் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பத்து வருடங்களுக்கு முன்பு 2000-01ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது சென்னை மைதானத்தில் பயிற்சி எடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது சேப்பாக்கம் மைதானத்தில் நின்று கொண்டு, ஒரு நாள் ஆஸ்திரேலியாவுக்காக நான் சதம் போடுவேன் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். சென்னையில் பயிற்சி எடுத்த ராசியோ என்னவோ ஆஸ்திரேலியாவுக்காக நான் நிறைய ரன்கள் எடுக்க முடிந்தது.
அதற்கு நன்றிக் கடனாக இந்த நகருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசிக்க சென்னையும் ஒரு காரணம் என கருதுகிறேன்.
சென்னையில் நான் தொடங்கவுள்ள அகாடமியில் கிரிக்கெட் தவிர கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். இங்கு பயிற்சி பெற வரும் குழந்தைகள் வெறும் கிரிக்கெட்டோடு நின்று விடாமல் கல்வியிலும் ஸ்கோர் செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன். கல்விதான் அவர்களுக்கு கடைசி வரை கை கொடுக்கும் என்பது எனது எண்ணம்.
இந்த அகாடமி குறித்து டிராவிடுடன் பேசியுள்ளேன். அவரிடம் பல சிறப்பம்சங்கள் உள்ளன. நிச்சயம் அவரால் இந்த அகாடமியில் இணைந்து செயல்படும். அவருடன் பணியாற்றுவதை நானும் விரும்புகிறேன். பிளமிங்குடனும் பேசியுள்ளேன் என்றார் ஹெய்டன்.
ஏற்கனவே ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், கொல்கத்தாவில் பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
இதுதான் தன்னை ஈர்த்ததாகவும், ஸ்டீவ் பாணியில், சென்னையில், ஏதாவது செய்ய வேண்டும் என தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார் ஹெய்டன்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications