உலக கோப்பை: பாக்.கில் விளையாட இந்தியா, இலங்கை, வங்கதேசம் மறுப்பு!

2011ம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தெற்காசியாவில் நடைபெறவுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து இந்தப் போட்டியை நடத்துவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், பாகிஸ்தானை போட்டி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டது.
அதற்குப் பதிலாக பாகிஸ்தானில் நடப்பதாக இருந்த போட்டிகளை மற்ற மூன்று நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்க அது முடிவு செய்தது.
இந்த நிலையில், டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்றுள்ள மகிழ்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உலகக் கோப்பைப் போட்டிகளை மீண்டும் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் அரசோ அதற்கு நேர் மாறான எண்ணத்தில் உள்ளது. பாகிஸ்தானில் போட்டிகளை நடத்த வேண்டாம் என அந்நாட்டு உள்துறை கிரிக்கெட் வாரியத்திடம் கூறியுள்ளதாம். இங்கு போட்டிகள் நடந்தால் நிச்சயமாக பயங்கர தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கும். அதைத் தடுக்கும் சக்தி நம்மிடம் இல்லை என்று கூறியுள்ளதாம்.
இந்த நிலையில் புதிய திருப்பமாக, பாகிஸ்தானில் விளையாட விருப்பம் இல்லை என்று இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் ஐசிசியிடம் கூறியுள்ளன.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் சோமச்சந்திர டிசில்வா கூறுகையில், இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை ஐசிசியின் முடிவை (பாகிஸ்தானில் நடத்துவதில்லை என்ற முடிவை) ஆதரிக்கின்றன.
பாகிஸ்தானில் தற்போது சர்வதேச போட்டிகளை நடத்தக் கூடிய அளவிலான சூழ்நிலை இல்லை.
அதேபோல பாகிஸ்தானில் போட்டிகளை நடத்த அனுமதிக்காவிட்டால், நியூட்ரல் மைதானங்களில் நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையும் ஏற்கக் கூடியதாக இல்லை.
போட்டிகளை நடத்தும் நாடுகள்தான் போட்டிகள் எங்கு நடைபெற வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும்.
பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறாவிட்டாலும் கூட அதற்குரிய கட்டணம் அவர்களுக்கு தரப்பட்டு விடும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு போட்டியை மாற்றலாம் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆசியாவை விட்டு உலகக் கோப்பைப் போட்டி இடம் மாற்றப்பட மாட்டாது என்றார் அவர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடி இந்த வாரம் விவாதிக்கவுள்ளது. அப்போது பாகிஸ்தான் தெரிவித்துள்ள சில யோசனைகளையும் அது பரிசீலிக்கவுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications