
அர்ஜூனா விருது மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தேர்வுக்கான கூட்டம் கடந்த 18ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் விருதிற்கான வீரர்கள், வீராங்கனைகளை தேர்வு செய்ய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி, கால்பந்து வீரர் பெய்சூங் பூட்டியா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் விருது தேர்வு குழுவில் இடம் பெற்ற ரவிசாஸ்திரி கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இதை மறுத்துள்ள ரவி சாஸ்திரி, தன்னை தனிப்பட்ட முறையில் யாரும் கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது பெற தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்யும் கூட்டத்திற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. தகவல் தொடர்பு வளர்ந்துள்ள இந்த காலத்தில், ஒரு எஸ்.எம்.எஸ்., ஒரு போன் அழைப்பு அல்லது ஒரு இ-மெயில் கூட அனுப்பவில்லை.
உயரிய விருதுகள் பெற தகுதியுள்ளவர்களை தேர்வு செய்யும் குழுவில் என்னை சேர்த்திருப்பது பெருமைக்குரியது. ஆனால் ஊடகங்களின் மூலம் எனக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது சரியில்லை. நவீன தொலைத் தொடர்பு வசதிகள் உள்ள காலத்தில் விருது தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.