சண்டிகர்: இந்தியன் பிரிமீயர் லீக்கில் (ஐபிஎல்) இடம் பெற்றுள்ள அணிகள், வீரர்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டதைப் போல கபில் தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கெட் லீக்கில் (ஐசிஎல்) இடம் பெற்றுள்ள அணிகளும் விற்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அமீர்கானும், கரீனாகபூரும் தலா ஒரு அணிய வாங்கவுள்ளனராம்.
இந்திய கிரிக்கெட் வாரியம், திறமையுள்ள, இளம் வீரர்களைப் புறக்கணிப்பதாக கூறி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடருக்குப் பின்னர் தொடங்கப்பட்டதுதான் ஐசிஎல்.
கபில் தேவைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்புக்குப் போட்டியாக கிரிக்கெட் வாரியம் தொடங்கியதுதான் ஐபிஎல். ஆனால் ஐபிஎல் இன்று உலகம் பூராவும் பாப்புலராகி விட்டது. காரணம் அது அணிகளையும், வீரர்களையும் ஏலம் விட்டதுதான்.
ஐபிஎல்லில் உள்ள எட்டு அணிகளையும் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா, ஜூஹி சாவ்லா உள்ளிட்டோர் ஏலத்தில் எடுத்துள்ளனர். வீரர்கள் அதிகபட்சமாக டோணியை ரூ. 6 கோடிக்கு சென்னை ஏலத்தில் எடுத்துள்ளது.
இப்போது ஐசிஎல்லும் அதே பாதையில் பயணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இன்சமாம் உல் ஹக் தலைமையிலான லாகூர் பாட்ஷா அணியை அமீர்கான் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல, மும்ஜை சேம்ப்ஸ் அணியை கரீனா கபூரும் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.