நேப்பியர்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பாலோ ஆன் வாங்கி, இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. ஆட்ட நேர இருதியில், 267 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேப்பியரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ரன் குவிப்பில் ஈடுபட்டது.
9 விக்கெட் இழப்புக்கு 619 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. ரைடர் அபாரமாக ஆடி 201 ரன்கள் குவித்தார். டெய்லர் 151 ரன்களும், மெக்கல்லம் 115 ரன்களும் குவித்தனர். பிராங்களின் (52), வெட்டோரி (55) ஆகியோர் அரை சதம் போட்டனர்.
இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்ததன.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில், 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த இந்தியா இன்று தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது.
ஆனால் நியூசிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய விக்கெட்கள் மளமளவென சரிந்தன.
வி.வி.எஸ்.லட்சுமண் மிகவும் கஷ்டப்பட்டு போராடி 76 ரன்களை எடுத்தார். அதேபோல நேற்று ஆட்டமிழக்காமல் இருந்த டிராவிட் சிறப்பாக ஆடி 83 ரன்களைக் குவித்தார். சச்சின் சற்றே வேகமாக ஆட முயற்சித்தார் இருப்பினும் 49 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.
மற்றவர்கள் யாரும் இரட்டை இலக்கத்தை தொட முடியாமல் பெவிலியன் திரும்பினர். இறுதியில், 305 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை இழந்து பாலோ ஆன் ஆனது இந்தியா.
இதையடுத்து 2வது இன்னிங்ஸை ஆட இந்தியாவை நியூசிலாந்து கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது
முதல் இன்னிங்ஸைப் போலவே 2வது இன்னிங்ஸிலும் ஷேவாக் வேகமாக ஆடி, வேகமாக அவுட் ஆனார். 21 பந்துகளைச் சந்தித்த அவர் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
3வது நாள் ஆட்ட நேர இறுதியில், கம்பீர் 14 ரன்களுடனும், டிராவிட் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.
தற்போதைய நிலையில் ஆட்டம் முழுவதுமாக நியூசிலாந்துக்கு சாதகமாக திரும்பியுள்ளது.
முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பது நினைவிருக்கலாம்.