டெல்லி: நேரு கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி தனது வெற்றி கணக்கை துவக்கியுள்ளது. நேற்று நடந்த லீக் போட்டியில் கிர்கிஸ்தான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய கேப்டன் பூட்டியா சர்வதேச கால்பந்து போட்டியி்ல் அதிக கோல் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
ஐந்து நாடுகள் பங்கேற்கும் 12வது நேரு கோப்பை கால்பந்து தொடர் டெல்லியில் உள்ள அம்பேத்கார் மைதானத்தில் நடக்கிறது.
முதல் போட்டியில் லெபனான் அணியிடம் தோல்வியடைந்த இந்தியா நேற்று கிர்கிஸ்தானை எதிர்கொண்டது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. சர்குமார் சிங், என்எஸ் மஞ்சு, சுஷில்குமாருக்கு பதிலாக சுனில் சேத்ரி, மகேஷ் காவ்லி, தீபக் மன்டேல் ஆகியோர் முன்கள வீரர்களாக வந்தனர்.
100வது போட்டியில் பூட்டியா சாதனை...
இந்திய கேப்டன் பாய்ச்சங் பூட்டியா நேற்று தனது 100வது சர்வதேச கால்பந்து போட்டியில் களமிறங்கினார். இதையடுத்து அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நேற்று ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் படு ஜோராக விளையாடினர். சிறப்பாக செயல்பட்ட பூட்டியா 43வது நிமிடத்தில் ஒரு சூப்பர் கோல் அடித்தார். இது அவர் அடிக்கும் 42வது கோல்.
இதன்மூலம் சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக ஐஎம் விஜயன் 41 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
57வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சுனில் சேத்ரி கோலாக மாற்றினார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் கிர்கிஸ்தான் ஒரு கோல் போட்டது.
இதையடுத்து கிர்கிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய வீரர்கள் எளிதாக முறியடித்தனர். இதையடுத்து இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆட்டநாயகன் விருதை பூட்டியா தட்டிச் சென்றார்.
இந்திய அணி வரும் 26ம் தேதி நடக்கும் அடுத்த போட்டியில் இலங்கையை சந்திக்கிறது.