கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின்போது இலங்கை ரசிகர்கள், இந்தியப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா மீது கல்வீச்சி ரகளை செய்ததால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி-20ல் போட்டியில் விளையாட இருக்கிறது.
தம்புலாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி நேற்று கொழும்புவில் தவங்கியது.
முதல் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத ஷேவாக், ரோகித் சர்மாவுக்கு பதில் சேர்க்கப்பட்டார். முனாப் படேலுக்கு பதிலாக பிரவீண் குமார் களமிறங்கினார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சினும், ஷேவாக்கும் இறங்கினர். கடந்த போட்டியில் சச்சின் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் ஷேவாக் பட்டாசாகப் பொறிந்து 26 பந்துகளில் 42 ரன்களைக் குவித்து ஜெயசூர்சூயாவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
மறு முனையில் சிறப்பாக ஆடி வந்த கம்பீரும் 28 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில், மகரூப் பந்தில் ஆட்டமிழந்தார்.
யுவராஜ் சிங்கும், ரெய்னாவும் பொறுமையாக ஆடினர். ரெய்னா 29 ரன்களில் விழ, நிதானமாக ஆடிய யுவராஜ் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் டோணி 23 ரன்களைச் சேர்த்தார். யூசுப் பதான் சிறப்பாக ஆடி 28 பந்துகளில் 21 ரன்களைச் சேர்த்தார்.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்கம் ஏமாற்றம் அளித்தது. தில்ஷன் 8, ஜெயசூர்யா 17, சங்ககரா 4 அடுத்தடுத்து அவுட்டானார்கள்.
அடுத்து வந்த கேப்டன் ஜெயவர்தனா, கந்தம்பியுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடினார். அவர் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கந்தம்பி 93 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை 241 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் தொடரில் 2-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது. இது ஒரு நாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெறும் ஏழாவது போட்டியாகும்.
இலங்கை ரசிகர்கள் ரகளை
போட்டிக்கிடையே இந்திய பவுலர் இஷாந்த் மீது இலங்கை ரசிகர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால், போட்டி சிறிது நேரம் தடைபட்டது.
மூன்றாவது போட்டி வரும் 3ம் தேதி கொழும்புவில் நடக்கிறது.
டோணி நம்பர் ஒன்
முதல் போட்டியில் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றி தேடிதந்த டோணி ஐசிசி ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெயில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.