டெல்லி: நேரு கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை வீழ்த்தியது. இதையடுத்து 6 புள்ளிகளுடன் பைனல் வாய்ப்பை அதிகரித்து கொண்டது.
ஐந்து நாடுகள் பங்கேற்கும் 14வது நேரு கோப்பை கால்பந்து தொடர் டெல்லியில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.
இதில் இந்திய வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் பாய்ச்சங் பூட்டியா துடிப்புடன் விளையாடினார். இவர் 25வது நிமிடத்தில் இந்தியாவின் கோல் கணக்கை துவக்கி வைத்தார். இதையடுத்து முதல் பாதியில் இந்தியா 1-0 என்ற முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 62வது நிமிடத்தில் இலங்கையின் ரூவன்திலகா ஒரு கோல் போட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார். இதையடுத்து சுதாரித்து கொண்ட இந்திய வீரர்கள் தாக்குதல் பாணி ஆட்டத்துக்கு மாறினார்கள். கெளரமன்கி சிங் 69வது, ஸ்டீவன் டையால் 85வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர்.
இறுதியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. புள்ளிபட்டியலில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து இந்தியாவின் இறுதி போட்டி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று நடக்கும் பலமிக்க சிரியா அணிக்கு எதிரான போட்டியில் லெபனான் அணி தோற்கும் பட்சத்தில் இந்தியாவின் பைனல் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.