சூப்பர்-8ல் இந்தியா, அயர்லாந்து-வெளியேறிய ஆஸி, வங்கதேசம்
நாட்டிங்ஹாம்: வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து ஏ பிரிவில் இந்தியா, அயர்லாந்து அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றது. வங்கதேசம் முதல் ஆளாக தொடரில் இருந்து வெளியேறியது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா இலங்கையிடம் தோற்று சூப்பர்-8 வாய்ப்பை நழுவவிட்டது.
டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் இந்தியா 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது.
இதையடுத்து நேற்று நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் வங்கதேசம் களமிறங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
வங்கதேச பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினர். மோர்டசா 33, தமிம் இக்பால் 22 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேற வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த அயர்லாந்துக்கு நெய்ல் பிரையன் 25 பந்தில் 40, கெவின் பிரையன் 17 பந்தில் 39 ரன்களும் எடுத்து வெற்றி தேடி தந்தனர். அயர்லாந்து 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த தோல்வியின் காரணமாக வங்கதேசம் முதல் ஆளாக தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து ஏ பிரிவில் இருந்து இந்தியா, அயர்லாந்து அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறின.
இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் லீக் போட்டி வரும் 10ம் தேதி நடக்கிறது.
வெளியேறியது ஆஸ்திரேலியா...
நேற்று நடந்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அடு்த்து பேட் செய்த இலங்கை 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வென்றது.
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்ததை அடு்த்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த பிரிவில் இடம்பெற்ற மற்ற இரண்டு அணிகளான இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் சூப்பர்-8க்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications