ஹாமில்டன்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் நான்காவது ஒரு நாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடக்கிறது. இந்திய அணி இப்போட்டியில் வென்று நியூசிலாந்து மண்ணில் நடக்கும் ஒரு நாள் தொடரை முதன் முறையாக கைப்பற்றி சாதிக்க காத்திருக்கிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
சச்சின் சந்தேகம்...
இந்நிலையில் நான்காவது போட்டி நாளை ஹாமில்டனில் நடக்கிறது. மூன்றாவது போட்டியில் அதிரடி காட்டி 163 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்த சச்சின் இப்போட்டியில் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. இவருக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
சச்சின் கூறுகையில், மூன்றாவது போட்டிக்கு முன்பே வயிற்றில் வலி இருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் போட்டிக்கு தயாராகிவிடுவேன் என்றார். ஒருவேளை சச்சின் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக ரோகித் சர்மா அல்லது இர்பான் பதான் சேர்க்கப்படலாம். ஆனால், அவர் ஐந்தாவது போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷேவாக், ரெய்னா, யுவராஜ் சிறப்பான பார்மில் இருப்பதால் ஹாமில்டனிலும் நியூசிலாந்து பவுலர்களுக்கு சிக்கல் காத்திருக்கிறது. டோணி நல்ல கேப்டனாக அணியை வழிநடத்தி செல்கிறார். வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட இஷாந்த் நாளை களமிறங்குகிறார். இதையடுத்து முனாப் நீக்கப்படுவார் என தெரிகிறது.
முதன் முறையாக...
இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாட முதன்முறையாக நியூசிலாந்துக்கு 1975-76ல் சென்றது. அதில் 0-2 என தோல்வியடைந்தது. 1980-81ல் 0-2 எனவும், 2002-03ல் 2-5 எனவும் ஒரு நாள் தொடரை இழந்தது.
1993-94ல் 2-2 எனவும், 1998-99ல் 2-2 எனவும் தொடரை சமன் செய்தது. தற்போது ஆறாவது முறையாக ஒரு நாள் தொடருக்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஆனால், இதுவரை ஒரு முறை கூட தொடரை கைப்பற்றவில்லை.
நாளை இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் நியூசிலாந்து மண்ணில் முதன்முறையாக தொடரை கைப்பற்றி, சாதிக்கலாம்.
அதேநேரத்தில் மூன்றாவது போட்டியில் விளையாடாத நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இது நியூசிலாந்து அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் வென்றால் மட்டுமே தொடரை குறைந்தபட்சம் சமனாவது செய்ய முடியும் என்றநிலையில் நியூசிலாந்து இருக்கிறது. இதனால் நாளை இந்திய அணிக்கு கடும் சவால் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.