தொடர்ச்சியாக 9 வெற்றி - டோணி தலைமையில் இந்தியா சாதனை
கொழும்பு: இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் கம்பீர் சதம் சதம் கடக்க இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இதன்மூலம் கடைசியாக விளையாடிய 9 போட்டிகளிலும் வென்று சாதித்து காட்டியது.
முன்னதாக முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை 265 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி-20 போட்டியில் விளையாடுகிறது.
முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று அசத்தியது. தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில் நேற்று நடந்த நான்காவது போட்டியில் ஆடியது.
துவக்க வீரராக வந்த ஷேவாக் 5 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார்.
அடுத்து வந்த கேப்டன் டோணி, கம்பீருடன் சேர்ந்து சூப்பராக விளையாடினர். இவரது அதிரடியை தடுத்து நிறுத்த முடியாமல் ஜெயவர்தனா ஆடிப் போனார்.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தநிலையில் டோணி, ஜெயசூர்யா பந்தில் அவுட்டானார். 2 சிக்சர், 4 பவுண்டரி விளாசிய டோணி 94 ரன்கள் எடுத்தார். இவர் சதம் கடப்பார் என பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த போட்டியில் கலக்கிய யுவராஜ் இம்முறை 5 ரன்களுக்கு குலசேகரா பந்தில் நடையை கட்டினார். அதிரடி யூசுப் பதான் டக் அவுட்டானார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கம்பீர் சதம் கடந்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவரது 6வது சதமாகும். இவருக்கு துணையாக ரெய்னா ரன்கள் சேர்த்தார்.
கம்பீர் 114வது ரன் எடுத்த ஒரு நாள் போட்டியில் தனது புதிய அதிகபட்ச ஸ்கோரை எட்டினார். இவர் 1 சிக்சர், 14 பவுண்டரி உட்பட 150 ரன்கள் எடுத்து, முரளிதரன் பந்தில் அவுட்டானார்.
இந்த விக்கெட்டின் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்(503) எடுத்த வீரர் என்ற சாதனையை முரளிதரன் படைத்தார். முன்னதாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 502 விக்கெட் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
கடைசி கட்டத்தில் ரெய்னா அதிரடியாக 49 ரன்கள் எடுத்தார். ரோகித் 4 ரன்கள் சேர்த்தார். இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இலங்கைக்கு ஜெயசூர்யா அதிரடி துவக்கம் தந்தார். ஆனால் இவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 16 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தில்ஷன் 38, கேப்டன் ஜெயவர்தனா 28 ரன்கள் எடுத்தார். சங்ககரா (56) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரைசதம் கடந்தார். இறுதியில் மகரூப் 28, குலசேகரா 39 அதிரடியாக ரன்கள் சேர்க்க இலங்கை 250 ரன்களை தாண்டியது. 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதன்மூலம் இந்திய அணி முதன் முறையாக தொடர்ந்து 9 ஒரு நாள் போட்டிகளில் வென்று சாதனை படைத்தது.
ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி வரும் 8ம் தேதி கொழும்புவில் நடக்கிறது.


Click it and Unblock the Notifications