நியூசி. 167/4 - தொடர் வெற்றியை நோக்கி இந்தியா...
வெல்லிங்டன்: வெல்லிங்டன் டெஸ்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 434 ரன்களுக்கு டிக்ளேர் செய்து நியூசிலாந்துக்கு வெற்றி இலக்காக 616 ரன்களை நிர்ணயித்துள்ளது. நான்காவது நாள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இதையடுத்து இந்தியா தொடர் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் வெல்லிங்டனில் நடக்கிறது. முதல் இரண்டு போட்டி முடிவில் தொடரில் 1-0 என முன்னிலையில் இருக்கும் இந்திய அணி மூன்றாவது டெஸ்டை டிரா செய்தாலே தொடரை வென்றுவிடலாம் என்ற சூழ்நிலையி்ல் களமிறங்கியது.
முதல் இன்னிங்சில் இந்தியா 379, நியூசிலாந்து 197 ரன்களுக்கு அவுட்டாகின. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்தியாவுக்கு காம்பிர் 167 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். இந்திய மூன்றாவது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்திருந்தது.
டோணி 16, யுவராஜ் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலக்கு 616...
இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. யுவராஜ் 40 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த ஹர்பஜன் டக் அவுட்டானார். அரைசதம் கடந் டோணி 56, ஜாகிர் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து நியூசிலாந்துக்கு 616 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. மெஷின்டோஸ் 4, பிளைன் 10 ரன்களுக்கு ஜாகிர் பந்தில் அவுட்டானர். அரைசதத்தை நெருங்கி கொண்டிருந்த குப்டீல் (49), ரைடர் (0) ஆகியோரை ஹர்பஜன் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
நியூசிலாந்து நான்காவது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் நியூசிலாந்து கடைசி நாளான நாளை 449 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம் என்பதால் நியூசிலாந்து அதிகபட்சம் போட்டியை டிரா செய்வதற்கே வாய்ப்புள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி தொடர் வெற்றியை நோக்கி முன்னேறி கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications