கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை கொழும்புவில் நடக்கிறது. இதில் வென்று இந்திய அணி ஒரு நாள் தொடரை 5-0 என கைப்பற்ற தயாராக இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டொன்டி-20ல் போட்டியில் விளையாட இருக்கிறது.
முதல் நான்கு போட்டியில் வென்ற இந்திய அணி தொடரை 4-0 என வென்றுள்ளது. தொடர்ந்து 9 ஒரு நாள் போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடி தந்து டோணி சாதனை கேப்டனாக திகழ்கிறார். அதே நேரத்தில் இந்திய அணி ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளது.
இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நாளை காலை 10.00 மணிக்கு கொழும்பில் நடக்க இருக்கிறது.
இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் கூறுகையில், முதலிடம் பிடிப்பதே இநதிய அணியின் தற்போதைய நோக்கம். முதல் நான்கு போட்டியில் வென்றுவிட்டதால் கடைசி போட்டியை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.
ஏனென்றால் எந்த அணியும் வெற்றியை எளிதில் விட்டுக்கொடுக்காது. சிறு வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ள தவறாது என்றார்.
கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட சச்சின் நாளை விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். முதல் மூன்று போட்டியிலும் அம்பயரின் தவறான தீர்ப்பால் அவுட்டான இவருக்கு அம்பயர்கள் இனியாவது கவனத்துடன் தீர்ப்பு வழங்க வேண்டும்.
ஷேவாக், கம்பீர், யுவராஜ், ரெய்னா, டோணி என அனைவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் இலங்கையை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இலங்கை அணியின் நிலைமை தான் பரிதாபமாக இருக்கிறது. மந்திர பவுலர் என்றழைக்கப்பட்ட மெண்டிஸ் மோசமான பார்ம் காரணமாக கடந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். சமிந்தா வாஸ் இல்லாமல் இலங்கை வேகங்கள் திணறி வருகின்றனர்.
முதல் போட்டியில் சதம் கடந்த ஜெயசூர்யா அதன்பின்னர் அணியை பற்றி அதிகம் கவலைப்படவில்லை. கேப்டன் ஜெயவர்தனாவுக்கு பேட்டிங் மறந்துவிட்டது. சங்ககரா மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் அளிக்கிறார். இந்தியாவுக்கு எதிராக எப்போதும் நன்றாக விளையாடும் தில்ஷனும் இதுவரை சோபிக்கவில்லை.
இலங்கை அணி அனைத்து தவறுகளையும் திருத்தி கொண்டு, ஆறுதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால், சூப்பர் பார்மில் இருக்கும் இந்திய அணி இதற்கு இடம் கொடுக்காது என்பதால் இலங்கைக்கு சிக்கல் தான்.