லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான டுவென்டி-20 உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இரண்டாவது டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இந்திய அணி ஏ பிரிவில் அயர்லாந்து, வங்கதேசம் அணிகளுடன் விளையாடுகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் வரும் 5ம் தேதி மோதுகின்றன.
இதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தலா 2 பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன. நேற்று நடந்த முதல் பயிற்சி போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஜாகிர், ஷேவாக், யுவராஜ் இடம்பெறவில்லை.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியை இஷாந்த் சர்மா தனது வேகத்தால் மிரட்டினார். இவர் துவக்க வீரர்கள் மெக்கலம் 31, ரைடர் 2 ரன்களுக்கு அவுட்டாகினார். குப்டீல் 10 ரன்களுக்கு அவுட்டானார்.
அடுத்த வந்த ரோஸ் டெய்லர் அதிரடியாக 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி நேரத்தில் ஸ்டைரிஸ் 29, பிராங்ளின் 10 பந்தில் 27 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் இஷாந்த் 4 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு கம்பீர் 14 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் டோணி 6 ரன்களுடன் திருப்தியடைந்து வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி ரோகித் 20 பந்தில் 36 ரன்கள் சேர்த்து வெட்டோரி சுழலில் போல்டு ஆனார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா, நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்தெடுத்தார். 3 சிக்சர், 3 பவுண்டரி விளாசிய இவர் 24 பந்தில் 45 ரன்கள் குவித்தார்.
நிதானமாக பேட் செய்த ரவிந்திர ஜடோஜா 40 பந்தில் 41 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்த்த யூசுப் பதான் கடைசி நேரத்தில் 7 பந்தில் 2 ரன்கள் எடுத்து சொதப்பினார்.
இதையடுத்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய அணி நாளை நடக்கும் இரண்டாவது பயிற்சி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.