யுவராஜ் அட்டகாச சதம் - இந்தியா அபார வெற்றி

இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தோடர் கிங்ஸ்டனில் தொடங்கியது.
அங்கு நேற்று நடந்த முதலாவது போட்டியில் இந்தியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஓப்பனர் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் இன்னொரு தொடக்க ஆட்டக்காரான திணேஷ் கார்த்திக் மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரும் சிலம்பாட்டம் ஆடி விட்டனர்.
யுவராஜ் சிங்கின் ஆட்டத்தில் அனல் பறந்தது. டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் எட்டு ஆட்டத்தில் பெற்ற தோல்வியைத் துடைக்கும் வகையில் இந்தியாவின் ஆட்டம் இருந்தது.
அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங் 131 ரன்களைக் குவித்தார். மறுபக்கம் திணேஷ் கார்த்திக் 67 ரன்களைக் குவித்தார். ஒரு நாள் போட்டிகளில் இதுதான் அவரது சிறப்பான ஆட்டமாகும்.
102 பந்துகளைச் சந்தித்து 131 ரன்களைக் குவித்த யுவராஜ் சிங் 10 பவுண்டரிகளையும், 7 சிக்சர்களையும் விளாசினார்.
பின்னர் வந்த கேப்டன் டோணி 41 ரன்களையும், யூசுப் பதான் 40 ரன்களையும் குவிக்க இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
பின்னர் ஆடத் தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 48.1 ஓவர்களில் 319 ரன்களுடன் நின்று போனது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மேற்கு இந்தியத் தரப்பில் சிவநரேன் சந்தர்பால் சிறப்பாக ஆடி 63 ரன்களைக் குவித்தார். ராம்தின் 29 ரன்களைச் சேர்த்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் வரிசையை சீர்குலைத்தவர் நெஹ்ராதன். கேப்டன் கெயிலும், மார்ட்டனும் வேகமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கியபோது நெஹ்ரா பிரேக் போட்டு முதலில் கெயிலை வெளியேற்றினார். கெயில் எடுத்த ரன்கள் 37.
சர்வான் 45 ரன்களும், மார்ட்டன் 42 ரன்களும் சேர்த்து அணிக்கு உதவினர். இருப்பினும் பெரிய ஸ்கோர் வெற்றி இலக்காகி விட்டதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் போராட்டம் வீணானது.
கடைசி இரு ஓவர்களில் 21 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் இருந்தபோது பந்து வீசிய ஆசிஷ் நேஹ்ரா ராம்தினை 49வது ஓவரின் முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதன் மூலம் இந்தியாவின் வெற்றி உறுதியானது.
இந்தியத் தரப்பில் நெஹ்ரா மற்றும் பதான் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
சிக்சர் மழை...
இப்போட்டியில் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது. மொத்தம் 23 சிக்சர்கள் இப்போட்டியில் விளாசப்பட்டன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications