லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் நாளை இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
கடந்த 2007ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த முதல் டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்றது.
இந்நிலையில் வரும் ஜூன் 5ம் தேதி இரண்டாவது டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது. இதில் 12 அணிகள் நான்கு பிரிவுகளாக போட்டியிடுகின்றன.
ஏ பிரிவில் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளும், பி பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளும், சி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், டி பிரிவில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் விளையாடுகின்றன.
ஜூன் 5ம் தேதி நடக்கும் துவக்க போட்டியில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தலா 2 போட்டியில் விளையாட இருக்கின்றன.
நாளை நடக்கும் பயிற்சி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. மற்ற பயிற்சி போட்டிகளில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்காவையும், ஆஸ்திரேலியா, வங்கதேசத்தையும், அயர்லாந்து அணி, நெதர்லாந்தையும் எதிர் கொள்கின்றன.
ஜூன் 3ம் தேதி நடக்கும் இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதுகின்றன.