தடகளம்: கெளடா-மந்தீப் கெளர்-பிரீஜா தோல்வி
பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளி்ல் தடகளத்தில் இந்தியாவுக்கு இன்று தோல்வியே கிடைத்தது.
வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் விகாஸ் கெளடா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறினார். அதேபோல 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் மந்தீப் கெளர் அரை இறுதிக்கு முன்னேறத் தவறினார்.
வட்டு எறிதலில் 22வது இடமே கெளடாவுக்குக் கிடைத்தது. மொத்தம் 37 பேர் இதில் பங்கேற்றனர்.
அதேபோல 400 மீட்டர் மகளிர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் மந்தீப் கெளர் மிக மோசமாக ஓடி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். போட்டி தூரத்தை 52.88 விநாடிகளில் இவர் ஓடிக் கடந்தார்.
இது, மதுரையில் நடந்த தேசிய போட்டியில் இவர் ஓடிய 51.74 என்ற நேரத்தை விட குறைவானது என்பது சோகமானது.
பிரீஜாவுக்கு 25வது இடம்:
இதற்கிடையே மகளிர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் பிரீஜா ஸ்ரீதரன் 25 வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
மொத்தம் 29 பேர் கலந்து கொண்ட இப்போட்டியில் 25வது இடத்தைப் பிடித்தார் பிரீஜா. இவர் 32:34.64 என்ற நேரத்தில் போட்டி தூரத்தைக் கடந்தார்.
கடந்த ஜூன் மாதம் லண்டனில் இவர் 32:04.41 என்ற நேரத்தில் கடந்து தேசிய சாதனையைப் படைத்திருந்தார். அந்த சாதனையைக் கூட தற்போது பிரீஜாவால் முறியடிக்க முடியாமல் போய் விட்டது.
எத்தியோப்பிய வீராங்கனை திருனேஷ் திபாபா ஒலிம்பிக் சாதனையுடன் இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ண பூனியா, ஹர்வந்த் கெளர் தோல்வியுற்றனர். இதற்கு முன்பு இவர்கள் எறிந்த தூரத்திற்குக் கூட இப்போது எறிய முடியாத அவலம் ஏற்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் பூனியா. இவர் 58.23 மீட்டர் தூரம் எறிந்தார். ஹர்வந்த்தோ 56.42 மீட்டர் தூரத்திற்கு எறிந்தார்.
பூனியா இதற்கு முன்பு 63.41 மீட்டரும், ஹர்வந்த் கெளர் 63.05 மீட்டரும் எறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications