லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் பல நாடுகளின் தேசிய கொடிகள் நேற்று ஏற்றப்பட்டது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் உலகம் எங்கும் உள்ள 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில், உலகின் பல நாடுகளை சேர்ந்த தேசிய கொடிகள் பறக்கவிடுவது வழக்கம்.

ஒலிம்பிக் கிராமத்தின் மேயர் சார்லஸ் ஆலன் விழாவில் கலந்து கொண்டு, இந்திய அணியினரை முறைப்படி வரவேற்றார். கொடியேற்ற நிகழ்ச்சி பிறகு கண்கவர் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது 'நாங்கள் சாம்பியன்கள்' என்று துவங்கும் பாடலுக்கு நடனமாடிய கலைஞர்கள் இறுதியில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்திய அணியின் சார்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள பெரும்பாலான வீரர்கள், வீராங்கனைகள் இன்னும் லண்டன் வந்து சேரவில்லை. இதனால் கொடியேற்ற நிகழ்ச்சியில், டென்னிஸ் வீரர்கள் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா, வில்வித்தை வீராங்கனைகள் தீபிகாகுமாரி, பம்பாய்லா தேவி, சேக்ரோவாலு, ஹாக்கி அணியின் சில வீரர்கள், குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 35 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியி்ல் ஒலிம்பிக் கிராமத்தின் மேயர் சார்லஸ் ஆலன் கூறியதாவது,
பல்வேறு கலாச்சாரங்களில் பிறந்து வளர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், ஒலிம்பிக் கிராமத்தை சொந்த இடமாக கருத முடியும். ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து திரும்பி செல்லும் போது, பல மறக்க முடியாத நினைவுகள் உங்களுக்கு இருக்கும் என்றார்.
முன்னதாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை லண்டன் ஒலிம்பிக் நிர்வாகிகள் ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.