சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ரூ.2 கோடி மானியம்: ஜெயலலிதா
சென்னை: சென்னையில் 2013ம் ஆண்டில் நடைபெற உள்ள சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு தமிழக அரசு அளிக்கும் மானியத்தை 1 கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அறிவார்ந்த மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டும் இன்றியமையாதது என்பதால், இவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், டென்னிஸ் விளையாட்டில், தெற்காசியாவில் நடைபெறும் முக்கிய போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள், சென்னையில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தினால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் சர்வதேச தரத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியை நடத்துவதற்கு அரசின் சார்பில் 2005ம் ஆண்டு முதல் அரசு மானியமாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியில் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களும், இந்தியாவின் தலை சிறந்த டென்னிஸ் வீரர்களும் பங்கு கொண்டு வருகின்றார்கள். இதன் மூலம், இந்தப் போட்டி, உலக அளவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளுக்கு இணையாக மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
சென்ற ஆண்டு, இந்தப் போட்டியினை நடத்த முதல்வர் ஜெயலலிதா 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உத்தரவிட்டார். ஜனவரி 2013ல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன.
இந்த ஓபன் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளுக்கு வழக்கமாக அரசால் மானியமாக வழங்கப்பட்டு வந்த 1 கோடி ரூபாயை, 2 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கிராம மக்களிடம் விளையாட்டை மேம்படுத்த...
தமிழகத்திலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் விளையாட்டினை மேம்படுத்தும் பொருட்டு, மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் கிராம இளைஞர் மேம்பாட்டு விளையாட்டுத் திட்டத்தின் கீழ் விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த கட்டமைப்பு வசதிகளை சிறந்த முறையில் பராமரித்து பயன்படுத்திடும் வகையிலும் கிராம மக்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்திடும் வகையிலும், கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஒரு கிராமத்திற்கு ரூ. 20,000 வீதம் மொத்தம் 12,524 கிராம ஊராட்சிகளுக்கு மொத்தம் ஆண்டு ஒன்றுக்கு 25.05 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதே போல இறகுப் பந்து, மேசைப் பந்து, நீச்சல் மற்றும் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கும் முதல்வர் கோப்பைக்கான குழு விளையாட்டுப் போட்டிகளை நடத்திட ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்துவதற்காக 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விளையாட்டுகளில் மாநில அளவிலான போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர் ஒவ்வொருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் இடம் பெறும் விளையாட்டு வீரருக்கு தலா ரூ.75,000 ரூபாய், மூன்றாம் இடம் பெறும் விளையாட்டு வீரருக்கு தலா ரூ.25,000 ரூபாயும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications