போதை மருந்து பயன்படுத்தியது உண்மைதான்… லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் பகிரங்க மன்னிப்பு

உலகப் புகழ் பெற்ற டூர் டி ஃப்ரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் 7 முறை பட்டம் வென்று நம்பிக்கை நாயகனாக வலம் வந்தவர் ஆம்ஸ்ட்ராங். புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று உலக அளவில் ரசிகர்களை மனதை கொள்ளை கொண்டார். அவர் போதை மருந்து உட்கொண்டது கடந்த அக்டோபர் மாதம் உறுதி செய்யப்பட்டது.
வாழ்நாள் தடை விதிப்பு
இதையடுத்து அவரது 'டூர் டி ஃப்ரான்ஸ்' உள்ளிட்ட அனைத்து பட்டங்களும் பறிக்கப்பட்டன. அத்துடன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தாம் நிர்வகித்து வந்த புற்றுநோய் அறக்கட்டளை தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். ஆனால், இதுவரை தாம் போதை மருந்து எடுத்துக்கொண்டதை ஒப்புக்கொள்ளாமல் மெளனம் காத்து வந்தார்.
மன்னிப்பு கோரினார்
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஓபரா வின்ஃப்ரேவிற்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் தான் 7 போட்டிகளிலும் போதை மருந்து பயன்படுத்தியது உண்மைதான் என்று கூறினார். தன் தவறை மன வருத்தத்துடன் ஒப்புக்கொண்ட ஆம்ஸ்ட்ராங், தனது இந்த செயலுக்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.
இந்த நிலையில் சிட்னியில் 2000-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஆம்ஸ்ட்ராங் வென்ற வெண்கலப் பதக்கத்தை திரும்பப் பெற சர்வதேச ஒலிம்பிக் சங்கம் முடிவுசெய்துள்ளது.
சமூக வலைத்தலங்களில் ஆதரவு
ஆம்ஸ்ட்ராங் தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் சரமாரியாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலக அளவிலும் இந்திய அளவிலும் டிவிட்டர் டிரெண்டிங்கில் ஆம்ஸ்ட்ராங் பற்றியே விவாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications