இந்தியா ஏமாற்றம்-139 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி
கொழும்பு: முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா 139 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.
இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் கொழும்பில் நடக்கிறது. முதல் லீக் போட்டியில் இலங்கையும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தை வீழ்த்தின.
இதையடுத்து இந்தியா, இலங்கை அணிகள் பைனலுக்கு முன்னேறின. இந்நிலையில் அதிகம் முக்கியத்துவம் இல்லாத கடைசி லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.
ஜெயசூர்யா அதிரடி...
இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. துவக்க வீரர் ஜெயசூர்யா அதிரடி துவக்கம் தந்தார். அவர் 13 பவுன்டரி உட்பட 79 பந்தில் 98 ரன்கள் எடு்த்து, 2 ரன்களில் சதம் அடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார்.
தில்ஷன் 23, சங்ககரா 5, ஜெயவர்தனே 17 ரன்கள் எடுத்தனர். கடைசியில் வந்த கந்தம்பி 73 பந்தில் 91 ரன்கள் எடுத்தார். இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது.
டிராவிட் ஆறுதல்...
கடின இலக்கை சேஸ் செய்த இந்திய அணிக்கு துவக்கம் ஏமாற்றமாக அமைந்தது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 16, சச்சின் 27 ரன்களுக்கு அவுட்டானார்கள்.
யுவராஜ் 16 ரன்களுக்கும், ரெய்னா ரன் எடுக்காமலும் அவுட்டானார்கள். அடுத்து வந்த வீரர்கள் இலங்கை பவுலர் மேத்திவ்ஸ் பந்துவீச்சில் வரிசையாக பெவிலியன் திரும்பினர். டிராவிட் மட்டும் 47 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
இந்தியா 37.2 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 139 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இலங்கை சார்பில் மேத்திவ்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications