ஷூ கூட இல்லாமல் லண்டனுக்குப் போகும் இந்திய நடைப் போட்டி வீரர்கள்!

இவர்கள் இருவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் சிப்பாய்கள் ஆவர். இவர்களது மாத சம்பளம் வெறும் ரூ. 15,000தான். இதை வைத்துக் கொண்டு போட்டிக்குத் தேவையான நல்ல ஷூ வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் உரிய ஷூ கூட இல்லாமல் தற்போது லண்டன் போக தயாராகி வருகின்றனராம்.
நடைப் போட்டிக்கென்ற சிறப்பு ஷூக்கள் உள்ளன. அதைப் போட்டுக் கொண்டுதான் போட்டியில் பங்கேற்க வேண்டும். ஆனால் அந்த ஷூவை வாங்கக் கூட இவர்களது பொருளாதார நிலை இடம் கொடுக்கவில்லை. ஆண்டுக்கு எப்படியும் 4 முதல் 5 ஜோடி ஷூவை வாங்கியாக வேண்டும்.
இவர்கள் இருவரது குடும்பமும் மிகப் பெரியதாம். இவர்கள்தான் வீட்டில் சம்பாதிக்கும் நிலையில் உள்ள ஆண்கள். ஆனால் இந்த பொருளாதார கஷ்டத்தையும் தாண்டி நாட்டுக்காக ஒரு ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற வேண்டும் என்ற துடிப்புடன் நடைப் போட்டியில் பங்கேற்கின்றனர் இருவரும். இந்தப் போட்டிக்கு தயாராவதற்காக கையிலிருந்து பல ஆயிரம் ரூபாய் பணத்தை இருவரும் செலவிட்டுள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பல கோடி ரூபாயைக் கொட்டி பயிற்சி அளித்துள்ளதாக அரசு கூறியுள்ளது. ஆனால் இந்த இருவருக்கும் ஒரு நல்ல ஷூ வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கூடவா அரசுக்குத் தோன்றவில்லை என்ற கேள்வி எழுகிறது.
இவர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையகமோ, விளையாட்டுத்துறையோ எந்தவித உதவியும் செய்யவில்லையாம்.
கடந்த 18 மாதங்களில் ஷூவுக்காக ராணா மட்டும் ரூ. 40,000 வரை செலவழித்துள்ளாராம். ஒவ்வொரு ஷூவும் ரூ. 6000 வரை விலை வருமாம். தற்போது இந்த ஷூக்கள் பழையதாகி விட்டனவாம். புதிய ஷூ வாங்க வசதியில்லை.
ராணாவின் பூர்வீகம் நேபாளம் ஆகும். அங்கு வறுமையான குடும்பத்தில் பிறந்த ராணா, வறுமையிலிருந்து தப்பிக்க இந்திய ராணுவத்தில் இணைந்தார். அவருடைய தந்தை நேபாளத்தில் இன்னும் விவசாயக் கூலி வேலை பார்த்து வருகிறாராம்.
இர்பான் கேரளாவைச் சேர்ந்தவர். மெட்ராஸ் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்தவர். இவரது குடும்பமும் வசதியில்லாத குடும்பம்தான். இவரது நிலைமை சற்று பரவாயில்லை. மலையாள நடிகர் மோகன்லால், இர்பானுக்கு ஓரளவு உதவி செய்துள்ளாராம்.
இருவரும் இணைந்து ஒரே குரலில் கூறுகையில், எங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. நல்ல ஷூக்கள்தான் எங்களது இப்போதைய தேவை. அதை செய்து கொடுத்தால் போதும் என்கிறார்கள்.
இவர்களின் நிலை குறித்து மீடியாக்களில் செய்தி வந்த பின்னர்தான் சற்று சுதாரித்துள்ளது இந்திய விளையாட்டு ஆணையகம். இதுகுறித்து அந்த ஆணையகத்தின் பிராந்திய இயக்குநர் எஸ்.எஸ்.ராய் கூறுகையில், வீரர்களின் நிலை கவலைக்குரியதே. அவர்கள் ஷூ வாங்க ஆகும் செலவை ஆணையகமே கொடுக்கும். நாங்கள் அவர்களைப் பார்த்துக் கொள்வோம் என்றார்.


Click it and Unblock the Notifications