
ஒலிம்பிக் ஆடவர் 50 மீ. ரைபிள் 3 பொசிஷன் (படுத்தநிலை, நின்ற நிலை, முட்டி போட்ட நிலை) போட்டியில் இந்தியாவின் ககன் நரங், சஞ்ஜீவ் ராஜ்புத் ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம் 41 பேர் தகுதிச் சுற்றில் இடம்பிடித்திருந்தனர்.
இதில் ககன் நரங் 1200க்கு 1164 புள்ளிகளைப் பெற்று 20வது இடத்திலும் சஞ்ஜீவ் ராஜ்புத் 1161 புள்ளிகள் பெற்று 26-வது இடத்துக்கும் போயினர். இதனால் இந்திய வீரர்கள் இறுதிச் சுற்றில் இடம்பெறவில்லை.
மானவ்ஜித் சிங்
இதேபோல் ஆடவர் டிராப் துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் மானவ்ஜித்சிங் கலந்து கொண்டார். அவர் 5சுற்றுகளில் மொத்தம் 119 புள்ளிகள் பெற்று 16-வது இடத்தையே பிடித்தார். அதனால் இறுதிச் சுற்றுக்கு அவர் தகுதி பெறவில்லை.
இரண்டு பதக்கம்
இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர்களின் போட்டி முடிவுக்கு வந்தது. இந்த முறை இந்தியாவில் இருந்து 11 பேர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றனர். இதில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன. 25 மீ ஆடவர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் விஜய் குமார் வெள்ளியும், 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் ககன் நரங் வெண்கலமும் வென்றனர்.