
லண்டன் ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம்(ஜூலை) 27ம் தேதி துவங்குகிறது. இதில் மொத்தம் 34 நீச்சல் போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த 950 நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
குறைந்த தூரம் கொண்ட நீச்சல் போட்டிகளில் ஹீட்ஸ் என்ற தகுதி சுற்று நடைபெறும். அதன்பிறகு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும். ஆனால் நீண்ட தூரம் கொண்ட நீச்சல் போட்டியில், தகுதிச் சுற்றில் வெற்றிப் பெறுபவர்கள், நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இந்திய வீரர்களின் விபரம்:
100 மீட்டர், 200 மீட்டர் பிரீ ஸ்டைல் நீச்சல் போட்டி - வர்தவால் கடே
100 மீட்டர், 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டி - சந்தீப் சிஜ்வால்
200 மீட்டர் பிரீ ஸ்டைல் - ஆரோன் டிஸோசா
1,500 மீட்டர் பிரீ ஸ்டைல் - செளரப் சங்விகர்
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் 1,500 மீட்டர் பிரி ஸ்டைல் நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ள செளரப், 17 வயது கொண்ட இளம் வீரர். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து பங்கேற்க உள்ள வயது குறைந்த வீரரும், நீண்ட தூரம் நீச்சல் போட்டிக்கு இந்தியாவில் இருந்து தகுதிப் பெற்ற முதல் வீரரும் செளரப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.