
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 49 கிலோ பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் தேவேந்திரோ சிங், ஹோண்டூராஸ் வீரர் பாய்ரோன் மோலினா பிகுரா உடன் மோதினார்.
இதில் துவக்கம் முதலே இந்திய வீரர் அதிரடியாக ஆடினார். இதில் முதல் சுற்றிலேயே நிலைக் குலைந்த பாய்ரோன் தரையில் விழுந்தார். இதனால் முதல் ரவுண்டின் 2.64 நிமிடத்தில் அம்பயர் போட்டியை நிறுத்தினார். அதன்பிறகு பாய்ரோன் மோலினாவால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதால், 24:2 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய வீரர் தேவேந்திரோ சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
முதல் சுற்றில் வெற்றிப் பெற்றுள்ள தேவேந்திரோ சிங், காலிறுதிக்கு முந்தைய சுற்றிற்கு முன்னேறி உள்ளார். தேவேந்திரோ சிங் அடுத்த போட்டியில் மங்கோலியா வீரர் செர்தாம்பா புரேவ்தோர்ஜை சந்திக்க உள்ளார்.
மனோஜ் குமார்:
மற்றொரு இந்திய வீரரான மனோஜ் குமார், ஆண்களுக்கான 64 கிலோ பிரிவில் துர்க்மேனிஸ்தான் வீரர் சேர்தர் ஹூடேபர்டியிவ் உடன் மோதினார். முதல் ரவுண்டில் பொறுமையாக ஆடிய இந்திய வீரர் மனோஜ் குமார், 13-7 என்று புள்ளியில் முன்னிலை வகித்தார்.
2வது ரவுண்டில் வேகமாக ஆடிய மனோஜ் குமார், 7-3 என்ற புள்ளியில் முன்னிலை பெற்றார். இதன் மூலம் போட்டியின் முடிவில் இந்திய வீரர் மனோஜ் குமார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மனோஜ் குமார் அடுத்த போட்டியில் இங்கிலாந்தின் தாமஸ் ஸ்டால்கரை எதிர்கொள்ள உள்ளார்.