Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக் கிராமத்தின் முன் ஈழத்தமிழ் இளைஞர் சிவந்தன் உண்ணாவிரதம்

Sivanthan
சென்னை: ஈழ தமிழர்களின் பிரச்சனை முன் நிறுத்தி லண்டன் ஒலிம்பிக் கிராமத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் சிவந்தனுக்கு ஆதரவாக மதிமுக பொது செயலாளர் வைகோ ஆதரவு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இலங்கையில் இருந்தும் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் ஈழ தமிழர்களின் பிரச்சனையை முன் நிறுத்தியும், ஒலிம்பிக் போட்டியில் இலங்கை அணி கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், ஒலிம்பிக் கிராமத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சிவந்தன் தலைமையிலான இப்போராட்டத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அனைத்து உலகத்தின் மனசாட்சியின் கதவுகளைத் தட்டி, ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி கேட்கிறார், உண்ணாநோன்பு எனும் தியாக வேள்வியை நடத்தும், ஈழத்தமிழ் இளைஞர் கோபி சிவந்தன். லண்டன் ஒலிம்பிக் பூங்காவுக்கு எதிரில், உயிரையும் தாரை வார்க்க துணிந்துவிட்ட ஈழத்துவீர இளைஞன் சிவந்தன், கடந்த 22ம் தேதி, உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி உள்ளார்.

உலக நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர், ஒலிம்பிக் போட்டியை காண வரும் போது, அவர்களின் இதயத்தில் அதிர்வு அலைகள் எழும். கொடூரமாக வதைக்கப்பட்ட ஈழத்தமிழர் எழுப்பிய துன்ப ஓலம், ஒலிம்பிக் பூங்காவின் காற்றோடு கலந்து, உலகில் உள்ளவர்களின் செவிகளில் பாய்ந்து, நெஞ்சத்தை உலுக்கும்.

ஈவு, இரக்கம் இன்றி கொன்று குவிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகள், மரண ஈட்டிகளில் சாய்க்கப்பட்ட அழிவு நிகழ்வுகள், மொழி, இனம், நாடு ஆகிவற்றை கடந்து, மனித மனங்களை புரட்டிப் போடும் காட்சிகளாக, நம் ஈழ உறவுகள் தருகின்ற கையேடுகள், துண்டுப்பிரசுரங்கள், குறுந்தட்டுகள், ஒலிம்பிக் பார்வையாளர்களின் விழிகளை நனைக்கும்.

மனித நேயத்தை, ஏன், மனித தன்மையையே ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்ட, ஓநாய்களை விட ரத்த வெறிக்கொண்டு ஈழத்தமிழ் குலத்தை கோரமாக வதைத்து, அழிக்க முற்பட்டு விட்ட, இலங்கையின் சிங்கள இனவாத அரசின் கோர முகத்தை, குறிப்பாக இன்றைய மஹிந்த ராஜபக்சே அரசின் கொடூர முகத்தை, உலகோரை உணர வைக்கவே, ஒலிம்பிக் பூங்காவுக்கு எதிரே, எங்கள் தமிழ்க்குல வேங்கை பட்டினி கிடக்கின்றான்.

இப்போராட்டத்தின் குறிக்கோளான 5 கோரிக்கைகள் வருமாறு:

1.தமிழ் இனத்தை அழிக்கும் இலங்கை அரசு அனுப்பும் போட்டியாளர்கள், லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு ஏற்பதை அனுமதிக்க கூடாது.

2.கொடும் குற்றம் புரிந்த இலங்கை அரசு மீது, சர்வதேச விசாரணையை ஐ.நா. முன்னெடுக்க வேண்டும்.

3.இலங்கை தீவில், ஈழத்தில், தமிழர் தாயகத்தில், தமிழர் நிலங்களை அபகரிக்கும் சிங்கள குடியேற்றத்தை, சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழத் தேசத்தை சிங்களமயமாக்கும் அக்கிரமம் அடியோடு தடுக்கப்பட வேண்டும்.

4. இலங்கையின் சிறைக்கூடங்களில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ள தமிழர்கள், போர் கைதிகள், நிபந்தனை இன்றி விடுவிக்கப்பட வேண்டும்.

5. நாலாபுறங்களிலும் இருந்து தாக்கப்பட்டு, ஈழத்தில் இருந்து வந்து, ஏதிரோலிகளாக தஞ்சம் கோரும் ஈழத்தமிழ் மக்களை, சர்வதேச நாடுகள் அடைக்கலம் கொடுத்து அரவணைக்க வேண்டும். திருப்பி அனுப்ப கூடாது.

லண்டனில் வாழும் தமிழர்களே, சிவந்தனுக்கு ஆதரவாக திரண்டு எழுங்கள், குரல் கொடுங்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, July 23, 2012, 15:15 [IST]
Other articles published on Jul 23, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+