
அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்(27). சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை படைத்தவர். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மைக்கேல், 200 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
அதேபோல 800 மீட்டர் குழு நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட மைக்கேல் தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் 19வது பதக்கத்தை வென்றவர் என்று புதிய சாதனையை மைக்கேல் படைத்துள்ளார்.
முன்னதாக ரஷ்யாவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான லெட்டினா, அதிகபட்சமாக 9 தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்றிருந்தார். கடந்த 1956 முதல் 1964ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 3 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு நிகழ்த்தப்பட்ட லெட்டினாவின் சாதனை, நீண்ட இடைவெளிக்கு பிறகு மைக்கேல் முறியடித்துள்ளார்.
இது குறித்து மைக்கேல் பெல்ப்ஸ் கூறியதாவது,
800 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் எனது குழுவினரிடம் வேகமாக செயல்பட்டு, எனக்கு முன்னணி நிலை அளிக்குமாறு கேட்டு கொண்டேன். அவர்களும் அதேபோல எனக்கு முன்னணி அளித்து உதவினர்.
200 மீட்டர் தனி நபர் போட்டியில் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஆனால் 400 மீட்டர் குழு போட்டியில் பதக்கம் வென்ற பிறகு எனது தன்னம்பிக்கை அதிகரித்தது. ஒலிம்பிக் போட்டியில் புதிய சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 15 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 19 பதக்கங்களை மைக்கேல் பெல்ப்ஸ் வென்றுள்ளார். இந்த நிலையில் இன்னும் 3 போட்டிகளில் மைக்கேல் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.