கோலி, சல்மான், தீபிகா, சாய்னாவுக்கு 5 நிமிட சவால் விட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்.. ஏன் என்னாச்சு?
டெல்லி: இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 5மினிட்ஔர் என்ற புதிய சவாலை துவங்கி வைத்துள்ளார்.
2019 கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-ஐ பிரபலமாக்கும் நோக்கிலும், விளையாட்டுத் துறைக்கு இளைஞர்கள் வர அவர்கள் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்த புதிய சவாலை தொடங்கி வைத்துள்ளார்.
5 நிமிட சவால்
5மினிட்ஔர் "5MinuteAur" என்ற இந்த 5 நிமிட சவாலில், விளையாடிக் கொண்டே ஐந்து நிமிடங்களுக்கு பேச வேண்டும். எதைப் பற்றி என்றால், சிறு வயதில் நாம் விளையாடப் போகிறோம் என கூறும் போது நம் பெற்றோர் படிக்கக் கூறுவார்கள். அப்போது நாம் 5 நிமிடம் மட்டும் விளையாடி விட்டு வருகிறேன் என கூறி இருப்போம். அதை பற்றி தான் விளையாடிக் கொண்டே பேச வேண்டும் என ரத்தோர் சவால் விட்டுள்ளார்.

நோக்கம் என்ன?
முன்பெல்லாம் விளையாட்டு என்றாலே அது கூடாது, படிப்புதான் முக்கியம் என்று இருந்தது. அதை மாற்றி இந்தியாவின் சிறுவர், சிறுமியர்களுக்கான குரலாக இந்த 5 நிமிட சவால் இருக்க வேண்டும் என கூறி உள்ளார் ரத்தோர்.

பிரபலங்களுக்கு சவால்
இந்த சவாலை ஏற்குமாறு பிரபல விளையாட்டு வீரர்கள் விராட் கோலி, சாய்னா நேவால் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான் மற்றும் தீபிகா படுகோனை கேட்டுக் கொண்டுள்ளார் ரத்தோர்.

முன்பு ஃபிட்னஸ் சேலன்ஞ்
ஏற்கனவே, 2017இல் ரத்தோர் தொடங்கி வைத்த ஃபிட்னஸ் சேலன்ஞ் சவால் ட்விட்டரை ஒரு கலக்கு கலக்கி கடைசியில் பிரதமர் மோடி வரை சென்றது. இந்த நிலையில் கேலோ இந்தியா தொடரை ஒட்டி இந்த புதிய சவாலை தொடங்கி வைத்துள்ளார் ரத்தோர்.

இரண்டு கைகளால் ஆடினார்
இந்த சவால் வீடியோவில் ரத்தோர் இரண்டு கைகளாலும் டேபிள் டென்னிஸ் ஆடிக் கொண்டே இந்த சவால் விவரங்களை தெரிவித்தார். இதே போல மற்ற பிரபலங்களும் விளையாடிக் கொண்டே பேசும் வீடியோக்கள் இனி இணையத்தில் வலம் வரத் துவங்கும்.


Click it and Unblock the Notifications