லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் துவக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. சொந்த மண்ணில் நடந்த போட்டியில் இங்கிலாந்து, கத்துக்குட்டி நெதர்லாந்திடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இரண்டாவது உலக கோப்பை டுவென்டி-20 தொடர் இன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று துவங்கியது. துவக்க விழா நிகழ்ச்சிக்களுக்கு இங்கிலாந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால், திடீரென மழை வந்ததை அடுத்து துவக்க விழா நிகழ்ச்சிகள் கைவிடப்பட்டது.
முதல் போட்டியில் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக பீட்டர்சன் இடம்பெறவில்லை. இதையடுத்து கோலிங்வுட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இங்கிலாந்துக்கு துவக்க வீரர்களாக வந்த போபரா, லூக் ரைட் ஜோடி அசத்தியது. நெதர்லாந்து பந்துவீச்சை ஒருகை பார்த்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 11.2 ஓவரில் 102 ரன்கள் எடுத்தநிலையில் போபரா 46 ரன்களுக்கு அவுட்டானார். ரைட் 71 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து இங்கிலாந்து 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் வந்த வீரர்கள் படுமந்தமாக பேட் செய்தனர். யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. இங்கிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
அடுத்த பேட் செய்த நெதர்லாந்து அணிக்கு டேரன் 20, ஜூயுடரன்ட் 12 ரன்கள் எடுத்து கொடுத்தனர். அடுத்து வந்த பீட்டர் போரன் 30, டாமா டீ குருத் அதிரடியாக 30 பந்தில் 49 ரன்கள் எடுக்க நெதர்லாந்து இலக்கை நோக்கி முன்னேற துவங்கியது.
கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்து கொடுத்த எளிய கேட்ச் மற்றும் பல ரன்-அவுட் வாய்ப்புக்களை இங்கிலாந்து வீரர்கள் தவறிவிட்டனர். இதையடுத்து நெதர்லாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானை வெல்ல வேண்டும்...
கத்துக்குட்டி நெதர்லாந்திடம் தோல்வியடைந்த இங்கிலாந்து நாளை பாகிஸ்தானுடன் நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இல்லையென்றால் தொடரிலிருந்து வெளியேற நேரிடும்.
இன்று இந்தியா-வங்கதேசம் மோதல்...
இந்நிலையில் இன்று ஏ பிரிவில் நடக்கும் முதல் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நடக்கிறது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறும், உலக கோப்பை இந்தியா தக்க வைத்து கொள்ளும் என யுவராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று நடக்கும் மற்ற போட்டிகளில் நியூசிலாந்து அணி, ஸ்காட்லாந்தையும், ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீசையும் சந்திக்கின்றன.