For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் வாய்ப்பு இல்லை:வரலாற்று சோகத்தில் இந்திய ஹாக்கி அணி

By Staff

சான்டியாகோ: தகுதிச்சுற்றில் வீழ்த்தி இந்திய அணியின் ஒலிம்பிக் கனவை இலங்கிலாந்து தகர்த்துவிட்டதால் 8 தடவை சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி கருதப்படுகிறது. ஒலிம்பிக் சரித்திரத்தில் கடந்த 1928ல் ஹாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட நாள்முதல் இந்திய அணி அதில் பங்கேற்று வருகிறது. இதுவரை 8 முறை சாம்பியன் பட்டம் பெற்று தங்கம் வென்றுள்ளது. அப்படிப்பட்ட அணி தற்போது தகுதிச்சுற்றிலேயே வெளியேற்றப்பட்டதால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அடைந்துள்ளனர்.

உலக கோப்பை மற்றும் தோகா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி மோசமாக விளையாடியதால் 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து தகுதி சுற்று தொடரில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. நேற்று அதிகாலையில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்தை எதிர் கொண்டது.

ஆரம்பம்முதலே இங்கிலாந்து சூப்பராக விளையாடியது. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் பேரி மிடில்டன் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். 10வது நிமிடத்தில் ரிச்சர்ட் மேன்டெல் கோல் அடித்து வித்தியாசத்தை அதிகரித்தார். முதல் 10 நிமிடங்களுக்குள் இங்கிலாந்து அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்துவிட இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது.

இந்நிலையில் சர்தரா சிங் மற்றும் சூப்பர் பார்மில்' இருக்கும் பிரப்ஜோத் சிங் ஆகியோருக்கு எல்லோ கார்டு' வழங்கப்பட்டது இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்தது. இவர்கள் இருவரும் வெளியேற, மற்ற வீரர்கள், தங்கள் விளையாடும் நிலைகளை கொஞ்சம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது வீரர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தவறிய வாய்ப்புகள்: முதல் பாதியின் இறுதியில் (31 வது நிமிடத்தில்) கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை ரகுநாத் தவறவிட்டார். முதல் பாதியின் முடிவில் இங்கிலாந்து 2-0 என்ற முன்னிலையில் இருந்தது. 47வது நிமிடத்தில் அடுத்த பெனால்டி வாய்ப்பை திலீப் டிர்கே நேரடியாக இங்கிலாந்து கோல் கீப்பரை நோக்கி அடித்து, ஏமாற்றினார். இதை தொடர்ந்து கிடைத்த மூன்று பெனால்டி வாய்ப்புகளையும் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டனர். இக்னேஸ் டிர்கே தன் பங்குக்கு இரண்டையும், சிவேந்திரா சிங் ஒரு வாய்ப்பையும் தவறவிட்டனர்.

இந்திய முன்கள வீரர்கள் அனைவரும் பொறுப்பில்லாமல் விளையாடிய போதும், கோல் கீப்பர் பல்ஜீத் சிங் இங்கிலாந்து வீரர்கள் அடித்த மூன்று பெனால்டி கார்னர்களை தடுத்து இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார். இந்திய வீரர்கள் ஒரு பந்தைக்கூட சரியாக 'பாஸ்' செய்யவில்லை. வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாட தவறியதாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும் ஹாக்கி வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

பத்ரா ராஜினாமா: இந்திய அணியின் தோல்வியை அடுத்து இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் துணை தலைவர் நரேந்திர பத்ரா ராஜினாமா செய்துள்ளார். கில்லின் மோசமான செயல்பாடுகளுக்கு அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து வரும் இவரும் ராஜினாமா செய்தி ருப்பது, ஹாக்கியின் நிலைமையை மேலும் பரிதாபத் துக்குள்ளாகி உள்ளது.
ரசிகர்கள் ஆவேசம்: இந்திய அணியின் தோல்வியால் அதிர்ச்சியடைந்த ஹாக்கி ரசிகர்கள், இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் கே.பி.எஸ். கில்லின் உருவ பொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை காட்டினர்.

அதிர்ச்சி... ஏமாற்றம்... கோபம்...
இந்திய ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாமல் தோல்வியடைந்தது அதிர்ச்சி அளித்துள்ளது. இதுபற்றி வெளியான கருத்துக்கள்.

மோசமான தேர்வு - ராகுல், காங்கிரஸ் பொதுச்செயலாளர்: அணி தேர்வு சரியில்லை. நான் சில ஹாக்கி அமைப்புகளுக்கு சென்றிருந்த போது இது குறித்து தான் புகார் செய்தனர். திறமையான பல வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஏமாற்றம் - மணிசங்கர் அய்யர், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்: இந்திய அணி தோல்வியடைந்த போது, ஹாக்கி ரசிகர்களைப் போன்றே நானும் ஏமாற்றமும், மனவேதனையும் அடைந்தேன். ஆனால் ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரை மாற்றும் விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது.

தயார் ஆக வேண்டும் - சுப்பையா, பயிற்சியாளர்: ஆண்கள் ஹாக்கி அணி அடைந்துள்ள தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அடுத்த மாதம் நடைபெற உள்ள மகளிருக்கான ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் சிறப்பாக விளையாட தயார் ஆவோம்.

பாரபட்சம் கூடாது - ராஜா, இ.கம்யூனிஸ்ட்: இது வெட்கக் கேடான விஷயம். எல்லா விளை யாட்டுகளும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். பாரபட்சமின்றி சம அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

கறுப்பு நாள் - தன்ராஜ்பிள்ளை, முன்னாள் கேப்டன்: மிக மோசமான தோல்வி இது. இந்திய ஹாக்கி வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள். இந்திய ஹாக்கி கூட்டமைப்பில் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டிய நேரம் இது. இந்திய அணிக்காக நீண்ட காலமாக விளையாடிய என்னை போன்ற வீரர்களின் உதவியைக் கூட கூட்டமைப்பு விரும்பவில்லை. கிரிக்கெட்டை முந்த முடியுமா? நீண்ட காலமாகவே தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. கிரிக்கெட் மட்டுமே வளர்கிறது என்ற குற்றச்சாட்டுகளை கேள்விப்படுகிறோம்.

பொதுவாக கிரிக்கெட்டைப் போல், ஹாக்கி அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகள் அதிகளவில் நடப்பது இல்லை. பத்திரிகை மற்றும் டிவி'களில் முக்கியத்துவம் கொடுக்கப் படும் விளையாட்டுகளில் ஹாக்கி அணி எப்போதும் பெரிய அளவில் சாதிப்பது இல்லை. ஆகவே கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் காப்பாற்றுவது ஒட்டுமொத்த அணிக்கும், அணி நிர்வாகிகளுக்கும் முக்கிய கடமை.

உலக கோப்பை, ஒலிம்பிக் மற்றும் ஆசியப் போட்டிகளின் போதுதான் இந்த ஹாக்கி அணி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு ஹாக்கி அணி சில சாதனைகளை புரிந்தது. இதனால் தற்போது கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி ஒலிம்பிக்கில் நுழைந்திருந்தால், தற்போது அணிக்கு பெருமை கிடைத்திருக்கும்.

ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி 8 தங்கம் வென்றுள்ளது. ஆனால், இதற்கு கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் ஹாக்கி இடம்பெற முடியாமல் போனது தான் காரணம். இந்திய ஹாக்கி அணியினர் தங்கம் வென்ற காலக்கட்டத்தில் அதை பிரபலப்படுத்த தற்போது போல் அதிகளவில் மீடியா' இல்லை. தற்போது மீடியாக்கள் அதிகரித்த சமயத்தில் கிரிக்கெட்டின் எழுச்சி ஹாக்கியை பின்தள்ளிவிட்டது.

விளம்பர நிறுவனங்கள், ஸ்பான்சர்கள் என யாருமே ஹாக்கி வீரர்களை கண்டு கொள்வது கிடையாது. கிரிக்கெட்டில் டுவென்டி-20' உலக கோப்பை, 19 வயதுக்கு உட்பட் டோருக்கான உலக கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக முத்தரப்பு தொடரை வென்றது என இந்திய அணி பல சாதனைகளை படைத்து வருகிறது. இப்படி கிரிக்கெட் எழுச்சியடைந்த நிலையில் ஹாக்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது, இந்த விளையாட்டுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை தான் வாங்கி குவிக்கின்றனர். பிரப்ஜோத் சிங், ராஜ்பால் போன்ற ஹாக்கி வீரர்களின் படத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. அடுத்து வரும் தொடர்களில் இவர்கள் சிறப்பாக விளையாடி ஹாக்கியின் கவுரவத்தை காக்க போராட வேண்டும். இல்லையென்றால் இந்திய ஹாக்கி தெற்காசிய போட்டிகளில் கூட ஜொலிக்க முடியாமல் போய்விடும். போதுமான நிதி ஒதுக்கீடு, நேர்மையான அணித் தேர்வு மற்றும் ஹாக்கி அணி நிர்வாகிகள் குறித்து உடனடியாக பரிசீலனை செய்யும் வரை கிரிக்கெட்டை ஹாக்கி பின்னுக்குத் தள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:20 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+