டெல்லி: ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி பிரான்சை வீழ்த்தியது. அதேபோல இந்திய பெண்கள் அணி, போலந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் தகுதிச்சுற்று போட்டிகளில் இந்திய அணிகள் முதலிடத்தை தக்க வைத்து கொண்டன.
இந்த ஆண்டு(2012) லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள ஹாக்கி அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று போட்டிகள் டெல்லியில் உள்ள மேயர் தியன்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
ஆண்கள் பிரிவு:
இதில் நேற்று ஆண்கள் பிரிவில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. உலக ஹாக்கி பட்டியலில் 10வது இடத்தில் உள்ள இந்தியா, முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது.
இந்திய அணியின் சிவேந்திர சிங் 4வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். அதன்பிறகு சந்தீப்சிங் 9வது நிமிடத்தில் 2வது கோலையும், 30வது நிமிடத்தில் அவரே 3வது கோலையும், 37 நிமிடத்தில் 4வது கோலையும் அடித்தார். அதன்பிறகு 39வது நிமிடத்தில் சுனில் ஒரு கோலும், துஷார் கண்டேகர் 62 நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
பிரான்ஸ் அணியின் தரப்பில் 35வது நிமிடத்தில் லூகாஸ் செவஸ்திரி ஒரு கோலையும், 57 நிமிடத்தில் பாபியன் மாக்னர் 1 கோலையும் அடித்தனர்.
போட்டியின் முடிவில் இந்தியா 6-2 கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் 3 கோல்களை அடித்த இந்திய வீரர் சந்தீப் சிங், இந்தியா ஆடியுள்ள 3 போட்டிகளில் மொத்தம் 7 கோல்கள் அடித்துள்ளார். இந்திய அணி பங்கேற்று உள்ள 3 போட்டிகளில் 9 புள்ளிகளுடன், தகுதிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
பெண்கள் பிரிவு:
பெண்கள் பிரிவு தகுதிச் சுற்றுப்போட்டியில் நேற்று இந்தியா, போலந்து அணிகள் மோதின.
இந்திய வீராங்கனைகள் ரிது ராணி 14வது நிமிடத்திலும், ராணி ராம்பால் 36வது நிமிடத்திலும், பூனம் ராணி 62 நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். அதற்கு பதிலாக போலந்து அணியினர் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
இதன்மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில், போலந்தை எளிதாக வெற்றி பெற்றது. இதுவரை 7 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, தகுதிப் பட்டியில் முதலிடத்தில் உள்ளது.