வதோதரா: கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மற்றும் அவருடைய தந்தை மஹமூத் கான் பதான் ஆகியோர் வதோதாராவில் உள்ள ஜும்மா மசூதியை அனுமதி பெறாமல் வீடியோவில் படமாக்கியதாக அவர்களது உறவினர் போலீஸில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய வேகப் பந்து வீச்சாளர் இர்பான் பதானின் அண்ணன்தான் யூசுப் பதான். இவர் ஒரு ஆல்ரவுண்டர். இந்திய அணியில் இடம் பெற்றவர். சமீபத்தில் நடந்த ஐபிஎல் டுவென்டி 20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் பதானின் உறவினரும், வதோதரா ஜும்மா மசூதியின் அறங்காவலர்களில் ஒருவருமான மஜீத் கான் பதான், வாடி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், மசூதியின் நிர்வாக கமிட்டி அனுமதியைப் பெறாமல் யூசுப் பதானும், அவரது தந்தையும் மசூதியை வீடியோவில் படம் பிடித்துள்ளனர். இது குற்ற நடவடிக்கையாகும். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை மஜீத்துக்கும், யூசுப் பதான், மஹமூத் கான் பதான் ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், மதத் தலைவர்கள் கூடி இரு தரப்புக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதைத் தொடர்ந்து மஜீத் கான் தனது புகாரை திரும்பப் பெற்றார்.
கிரிக்கெட் உலகில் புகுந்து இர்பான் பதான் பிரபலமடைவதற்கு முன்பு அவருடைய குடும்பம் வறுமையில் வாடி வந்தது. ஜும்மா மசூதி வளாகத்தில் உள்ள ஒரு அறையில்தான் மஹமூத் கான் பதான் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மசூதி நிர்வாகம் ஒரு வேலையும் போட்டுக் கொடுத்திருந்தது.
இர்பான் பதான் பிரபலமடைந்த பின்னர், 2004ம் ஆண்டு அவரது குடும்பத்தினர் வதோதராவிலேயே வசதியான பகுதியான தன்டல்ஜாவில் புதிய பங்களா கட்டி அங்கு குடியேறினர்.
இந்த நிலையில் மசூதியில் இருந்த மிகவும் பழமையான திருக்குரான் நூல் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டது. இதற்கு மஹமூத்கான் பதானின் கவனக்குறைவே காரணம் என்று கூறி அவர் பார்த்து வந்த வேலையிலிருந்து அவரை மசூதி நிர்வாகம் நீக்கியது.
அது முதலே மசூதி நிர்வாகத்திற்கும், மஹமூத்கான் பதானின் குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது. தற்போது அது போலீஸ் வரை வந்து விட்டது.