ஷேவாக் அதிரடி-41 ஆண்டுக்கு பின் நியூசி. தொடரை வென்ற இந்தியா

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் நான்காவது ஒரு நாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது.
சச்சி்ன் இல்லை...
இந்திய அணியில் காயம் காரணமாக சச்சின் பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக ரோகித் சர்மா களமிறங்கினார். காயம் குணமடைந்த இஷாந்த் களமிறங்க தயாரானதை அடுத்து முனாப் படேல் நீக்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் ஜீதன் படேலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. வெட்டோரி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று கொண்டார்.
துவக்க வீரர்களாக வந்த ரைடர், மெக்கலம் ஜோடி மிரட்டியது. முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்த நிலையில் ரைடர் (46), யுவராஜ் பந்துவீச்சில் அவுட்டானார். வழக்கத்துக்கு மாறாக நிதானமாக விளையாடிய மெக்கலம் அரைசதம் கடந்தார். 2 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 95 பந்தில் 77 ரன்கள் எடுத்து ஜாகிர் பந்தில் வெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த ரோஸ் டெய்லர் (5), குப்டில் (25), ஓரம் (1) விரைவில் அவுட்டாகினர். நியூசிலாந்து 41.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை வந்தது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.
சிறிது நேரத்தில் மழை நின்றது. இருப்பினும் 47 ஓவர்களாக போட்டி சுருக்கப்பட்டது. பேட்டிங்கை தொடர்ந்த நியூசிலாந்து 47 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.
ஷேவாக் சாதனை சதம்...
அடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 47 ஓவரில் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுது. சூப்பராக பேட் செய்த ஷேவாக் நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அதிரடியாக அரைசதம் கடந்தார்.
இந்திய அணி 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் ஆட்டம் தொடர்ந்தது. அப்போது இந்திய அணிக்கு 43 ஓவரில் 263 ரன்கள் எடுக்க வேண்டும் என இரண்டாவது முறையாக இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
தொடர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஷேவாக் 60வது பந்தில் சதம் பதிவு செய்தார். இதன்மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிகவேக சதம் கடந்த இந்தியர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக 1998ல் அசார் 62 பந்துகளில் சதம் கடந்ததே இந்திய அளவில் சாதனையாக இருந்தது.
முதன் முறையாக...
இந்நிலையில் மூன்றாவது முறையாக மழை குறுக்கே வந்தது. பின்னர் மீண்டும் ஆட்டம் துவங்கியதை அடுத்து 36 ஓவரில் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்தியாவுக்கு மீண்டும் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்திய அணி 23.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 201 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நான்காவது முறையாக மழை வந்து ஷேவாக்கின் அதிரடியை ரசித்து பார்த்து கொண்டிருந்த ரசிகர்களை சோதித்தது. மழை நிற்காததை இதையடுத்து இந்திய அணி டக்வொர்த்த லீவிஸ் முறைப்படி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ஷேவாக் 6 சிக்சர், 14 பவுண்டரி உட்பட 74 பந்தில் 125, கம்பீர் 67 பந்தில் 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி 3-0 நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதித்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:24 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications