டிரென்ட்பிரிட்ஜ்: உலகக் கோப்பை டுவென்டி 20 அரை இறுதிப் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவும், பாகிஸ்தானும் மோதவுள்ளன.
எஃகு போல உள்ள தென் ஆப்பிரிக்காவை பாகிஸ்தான் சமாளித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி அரை இறுதி வரை முன்னேறுமா என்ற சந்தேகத்தில் பலர் இருந்தனர். ஆனால் அதிரடியாக ஆடி வரும் பாகிஸ்தான் அடித்துப் பிடித்து அரை இறுதிக்குள் வந்து விட்டது.
பந்து வீச்சில் அபாரமாக இருக்கும் பாகிஸ்தான் அணி தனது பேட்ஸ்மென்களை விட பந்து வீச்சாளர்களையே பெரும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது.
அதேசமயம், மறுபக்கம் தென் ஆப்பிரிக்கா ராட்சத வேகத்தில் அரை இறுதிக்கு வந்து சேர்ந்துள்ளது.
இந்த இரு அணிகளும் இன்று டிரென்ட் பிரிட்ஜில் நடைபெறும் முதலாவது அரை இறுதியில் சந்திக்கின்றன.
இந்தப் போட்டித் தொடரிலேயே தென் ஆப்பிரிக்க அணிதான் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர்கள், பீல்டிங், கீப்பிங் என அனைத்துப் பிரிவிலும் கலக்கலாக உள்ளது, வலுவாகவும் உள்ளது.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான போட்டிகளின்போது அவர்களது பேட்ஸ்மென்கள் தவறு செய்தபோதிலும் கூட பவுலர்கள் அதை சமாளித்து வெற்றி தேடித் தந்து விட்டனர்.
கேப்டன் ஸ்மித், அப் டிவில்லியர்ஸ், கல்லிஸ் ஆகியோர் பேட்டிங்கில் கலக்குகின்றனர். பாகிஸ்தானைப் பொறுத்தவரை கேப்டன் யூனிஸ் கான், சோயப் மாலிக், சாஹித் அப்ரிதி, மிஸ்பா உல் ஹக் ஆகியோர் மட்டுமே அடித்து ஆட வேண்டும்.
இருப்பினும் பந்து வீச்சில் பாகிஸ்தான் நல்ல நிலையில் உள்ளதால், போராடும் குணத்துடன் அரை இறுதி மோதலுக்கு தயாராக உள்ளது.
பாகிஸ்தான் பந்து வீச்சாளர் உமர் கல் மிரட்டி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இந்தத் தொடரிலேயே அதிக விக்கெட்களை சாய்த்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் கல் என்பது குறிப்பிடத்தக்கு. அதேபோல சயீத் அஜ்மல்லும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். கூடவே அப்துல் ரஸ்ஸாக், அப்ரிதி ஆகியோரும் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா பலமான அணியாகத் தோன்றினாலும் கூட இது டுவென்டி 20 போட்டி என்பதால் அந்த நேரத்தில் யார் ஷைன் செய்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி என்பதால் புள்ளி விவரத்தை ஆராய்வதில் ஒரு புண்ணியமும் இல்லை.
மொத்தத்தில் இன்றைய போட்டியில் பட்டாசும், சரவெடியும் சளைக்காமல் வெடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு போட்டி தொடங்குகிறது.