நேப்பியர்: நேப்பியர் டெஸ்டில் இந்திய பந்துவீச்சை சிதறடித்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 619 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரைடர் இரட்டை சதம் கடந்து அசத்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்து பாலோ-ஆனை தவிர்க்க திணறி வருகிறது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் நேப்பியரில் நடக்கிறது. நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்திருந்தது. ரைடர் 137, பிராங்கிளின் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரைடர், இந்திய பந்துவீச்சை ஒருகை பார்த்தார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த பிராங்கிளின் (52) அரைசதம் கடந்து, அவுட்டானார்.
பீல்டிங் மோசம்...
கைக்கு வந்த பல கேட்ச்களை இந்திய வீரர்கள் கோட்டைவிட்டனர். இதை நன்றாக பயன்படுத்தி கொண்ட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்தனர். மோசமான பீல்டிங்கால் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடாத டோணிக்கு பதிலாக கேப்டன் பொறுப்பேற்ற ஷேவாக் திணறி போனார்.
சிறப்பாக பேட் செய்த ரைடர் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதம் கடந்தார். ஆனால், ஜாகிர் வீசிய அடுத்த பந்தில் கிளீன் போல்டு ஆனார். இவர் 1 சிக்சர் 24 பவுண்டரி உட்பட 201 ரன்கள் எடுத்தார்.
மெக்கலம் சதம்...
அடுத்து வந்த மெக்கலம் அதிரடியாக பேட் செய்து சதம் கடந்தார். இவர் 140 பந்தில் 115 ரன்கள் எடுத்தார். கேப்டன் வெட்டோரி 55 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 154.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 619 ரன்கள் எடுத்து, டிக்ளேர் செய்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷேவாக் அதிரடி துவக்கம் தந்தார். ஆனால், இவர் விரைவில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இவர் 25 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். இவரை தொடர்ந்து கம்பீர் 16 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய இஷாந்த் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த சச்சின், டிராவிட்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்து, 540 ரன்கள் பின்தங்கியுள்ளது. பாலோ-ஆனை தவிர்க்க இந்திய அணி முதல் இன்னிங்சில் இன்னும் கூடுதலாக 340 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. டிராவிட் (21), சச்சின் (0) களத்தில் இருக்கின்றனர்.