சென்னை: இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி இன்று சென்னை வந்து சேர்ந்தது.
கேப்டன் கிரீம் ஸ்மித் தலைமையிலான தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விமான நிலையத்திலிருந்து வீரர்கள் அனைவரும் சொகுசுப் பேருந்துகளில் தாஜ்கோரமண்டல் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலிலும், சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்திலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது.
2வது போட்டி அகமதபாத்திலும், 3வது போட்டி கான்பூரிலும் நடைபெறுகிறது.
இந்திய வீரர்கள் பகுதி பகுதியாக வருகை:
இந்திய அணி வீரர்கள் நேற்று ஒரு பகுதியாகவும், இன்று காலை ஒரு பிரிவினரும் சென்னை வந்து சேர்ந்தனர்.
கேப்டன் கும்ப்ளே, கங்குலி, சச்சின், டோணி உள்ளிட்டோர் இன்று காலை வந்தனர். ஷேவாக் உள்ளிட்டோர் நேற்று இரவே வந்து விட்டனர்.
இந்திய வீரர்கள் அனைவரும் கன்னிமாரா ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மழையால் பயிற்சி பாதிப்பு:
இதற்கிடையே, இன்றும் சென்னையில் நல்ல மழை பெய்துள்ளதால், இந்திய அணியினர் இன்று மாலை மேற்கொள்ளவுள்ள பயிற்சி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியினர் நாளை முதல் நெட் பிராக்டிஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.