பெங்களூர்: பெங்களூரில் நடந்த 2013ம் ஆண்டுக்கான ஆச்சார்யா மீடியா கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சுவர்ணா நியூஸ் 24/7 டிவி அணி கோப்பையை வென்றது.
இறுதிப் போட்டியில் அது சமயா டிவியை வென்றது. முதலில் பேட் செய்த சமயா டிவி 12 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த சுவர்ணா டிவி அணி, 7.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதற்காக அது ஐந்து விக்கெட்களை மட்டுமே இழந்தது.
வெற்றி பெற்ற சுவர்ணா அணியைச் சேர்ந்த சுபாஷித் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே அணியின் அபிஷேக் தொடர் நாயகனாகவும், சுவர்ணா அணியின் இன்னொரு வீரரான திலீப் சிறந்த பந்து வீச்சாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் விமர்சகரும், வர்னணையாளருமான சாரு சர்மா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மீடியா துறையைச் சேர்ந்தவர்கள் மைக், கேமரா, பேனாக்களை கீழே போட்டு விட்டு பேட் செய்வதையும், பவுலிங் செய்வதையும் பார்க்க வினோதமாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.
இதுபோன்ற மிகப் பெரிய நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வரும் ஆச்சார்யா நிறுவனம் பாராட்டுக்குரியதாகும் என்றார்.
வெற்றி பெற்ற சுவர்ணா அணிக்கு ரூ. 30,000 பரிசுப் பணம் வழங்கப்பட்டது. தோல்வி அடைந்த அணிக்கு ரூ.20,000 பரிசு அளிக்கப்பட்டது.
ஒன்இந்தியாவை விட்டு நழுவிய வெற்றி
முன்னதாக நடந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில், ஒன்இந்தியா அணியை சுவர்ணா டிவி அணி தோற்கடித்தது. இப்போட்டியில் சுவர்ணா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5வது ஆண்டாக நடந்த ஆச்சார்யா மீடியா கோப்பைப் போட்டித் தொடரில் மொத்தம் 18 பத்திரிக்கை நிறுவனங்கள் கலந்து கொண்டன. போட்டிகள் அனைத்தும் பெங்களூர் சோழதேவனஹள்ளியில் உள்ள திருமதி நாகரத்தினம்மா ஸ்டேடியத்தில் நடைபெற்றன.
இந்த ஆண்டுப் போட்டித் தொடருக்கான ஆன்லைன் பார்ட்னராக ஒன்இந்தியா திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.